சினிமா

'நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல'- பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!

"பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன்" என்று இளையராஜா தெரிவித்துள்ளார்.

'நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல'- பாராட்டு விழா குறித்து இளையராஜா நெகிழ்ச்சி!
Ilayaraaja
திரை இசை உலகில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரமாண்டமான பாராட்டு விழா நேற்று (செப்.13) நடைபெற்றது. இந்த விழாவிற்குப் பிறகு, இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது:

"நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை. இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும், அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், உலகநாயகன் கமல்ஹாசனுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.

'நெகிழ்ந்து போய்விட்டேன்'

ஒரு பாராட்டு விழாவை மிகச்சிறப்பாகத் திட்டமிட்டு நடத்தியதில் நெகிழ்ந்து போய்விட்டேன். இவ்வளவு அன்பு செலுத்துவதற்கு நான் என்ன செய்தேன்? நான் இதையெல்லாம் எதிர்பார்ப்பவன் அல்ல. சிம்பொனியில் சிகரம் தொட்டதால் அதை மிக முக்கியமான ஒன்றாக முதல்வர் கருதி, எனக்குப் பாராட்டு விழா நடத்துவதைத் தனது கடமையாக எண்ணிச் செய்திருக்கிறார்.

'முதல்வரின் வேண்டுகோளை நிறைவேற்றுவேன்'

முதல்வர் என்னிடம், சங்க இலக்கிய நூல்களுக்கு இசையமைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 'உங்களைத் தவிர வேறு யாரும் இதனைச் செய்ய முடியாது' என்றும் அவர் தெரிவித்ததும், எனக்கு மேலும் மேலும் ஊக்கம் அளிக்கிறது. முதல்வரின் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவேன்" என்று இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.