Breaking news

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் கூட்ட நெரிசல்: சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Supreme Court orders CBI probe
கரூர் மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் குறித்து, சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிபிஐ விசாரணையை உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் மூன்று பேர் கொண்ட கண்காணிப்புக் குழு கண்காணிக்கும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

வழக்கின் பின்னணி

கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம், முன்னதாக, ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து, தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் எதிர்மனுதாரராகச் சேர்க்கப்படாத தவெக தலைவர் விஜய் பற்றி, "அவருக்குத் தலைமைப் பண்பு இல்லை" என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தெரிவித்திருந்த சில கருத்துகளையும் நீக்கக் கோரி தவெக தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

தமிழக காவல்துறை அதிகாரி தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கச் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்துத் தவெக தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தவெக தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்டு இன்று முக்கியத் தீர்ப்பை வழங்கியது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி, இந்தச் சம்பவம் குறித்துச் சிபிஐ விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும், இந்தச் சிபிஐ விசாரணையை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு கண்காணிக்கும். இந்தக் கண்காணிப்புக் குழுவில் தமிழ்நாடுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற வேண்டும் என்றும், ஆனால் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளனர்.