தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்

நடிகர் விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் பல தடைகளை தாண்டி நேற்று மாலை திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Mar 28, 2025 - 06:29
Mar 28, 2025 - 06:31
 0
தடைகளை தகர்த்தெறிந்த விக்ரமின் ‘வீர தீர சூரன்’.. உற்சாகத்தில் ரசிகர்கள்
வீர தீர சூரன்

‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘வீர தீர சூரன்’. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹெச்.ஆர் பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று (மார்ச் 27) திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படத்திற்கு  டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இடைக்கால தடை

’வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஹெச்.ஆர் பிக்சர்ஸுக்கு  நிதியுதவி வழங்கிய பி4யு நிறுவனத்திற்கு ஓடிடி உரிமம் விற்கப்படாமலேயே படத்தை வெளியிடுவதாக அந்நிறுவனம் (பி4யு) டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் 7 கோடி ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும்  படம் தொடர்பான ஆவணங்களை 48 மணி நேரத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தார்.

இதனால், தமிழ்நாட்டில் நேற்று (மார்ச் 27) காலை 9 மணி காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றத்துடன் சென்றனர். அதுமட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் இப்படத்தின் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. 

வீர தீர சூரன் ரிலீஸ்

இதையடுத்து, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட இயக்குநர் அருண் குமார் ‘வீர தீர சூரன்’ திரைப்படம் திரையரங்குகளில் கண்டிப்பாக ரிலீஸ் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பல  தடைகளை தாண்டி நேற்று மாலை இப்படம் திரையரங்குகளில் வெளியானது. நடிகர் விக்ரம் தனது ரசிகர்களுடன் படத்தை பார்த்து ரசித்தார். மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் உட்பட பலர் படத்தை பாராட்டியுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow