ஓடிடி ரிலீஸுக்கு புது கண்டிஷன்... தனுஷ் உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் செக்!

Tamil Film Producers Council on Leading Heros OTT Release : தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அதில், புதிய படங்களின் ஓடிடி ரிலீஸ் முதல் சம்பளம் வரை புதிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Jul 29, 2024 - 15:19
Jul 29, 2024 - 15:33
 0
ஓடிடி ரிலீஸுக்கு புது கண்டிஷன்... தனுஷ் உட்பட முன்னணி ஹீரோக்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் செக்!
Tamil Film Producers Council on Leading Heros OTT Release

Tamil Film Producers Council on Leading Heros OTT Release : இந்தாண்டு தமிழில் வெளியான அரண்மனை 4, மகாராஜா, ராயன் ஆகிய படங்கள் மட்டுமே தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரஜினியின் லால் சலாம், கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட பல பெரிய பட்ஜெட் படங்கள் கூட எதிர்பார்த்தளவில் வெற்றிப் பெறவில்லை. அதேநேரம் டாப் ஹீரோக்கள் முதல் இரண்டாம் கட்ட மூன்றாம் கட்ட நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். இதுவும் தயாரிப்பாளர்களுக்கு சோதனையாக அமைந்துள்ளது. அதேபோல், புதிய படங்கள் அனைத்தும் ஒரு மாதத்திற்குள்ளாக ஓடிடியில் வெளியாகிவிடுகின்றன. இதனால் பெருமளவு ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் செல்லாமல், ஓடிடி ரிலீஸுக்காக காத்திருக்கின்றனர். இதற்கெல்லாம் சேர்த்து தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடியாக முடிவெடுத்துள்ளது.   

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரையரங்க மல்டிபிளக்ஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சென்னையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மிக முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில், ஓடிடியில் வெளியாகும் முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் புதிய திரைப்படங்கள் திரையரங்குகளில் ரிலீஸாகி 8 வாரங்களுக்கு பின்னரே OTT தளங்களில் வெளியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

அதேபோல், ஒரு சில நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஏற்கனவே அட்வான்ஸ் பெற்ற தயாரிப்பு நிறுவனத்தின் படங்களுக்கு பணிபுரியாமல், புதிதாக வரும் திரைப்பட நிறுவனங்களுக்கு சென்று விடுகின்றனர். இதனால் ஏற்கனவே அட்வான்ஸ் கொடுத்துள்ள தயாரிப்பாளர்கள் பெரும் பொருளாதார இழப்பை சந்திக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். எனவே, இனிவரும் காலங்களில் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பாளர்களிடம் அட்வான்ஸ் பெற்றிருந்தால், அந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்த படங்களில் நடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

அடுத்ததாக தனுஷின் பஞ்சாயத்துக்கும் இந்த மீட்டிங்கில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றுள்ளார். அதனால் இனிவரும் காலங்களில் தனுஷின் புதிய படங்களின் படப்பிடிப்பை துவங்குவதற்கு முன்பாக, அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தை கலந்தாலோசிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திரையரங்குகள் கிடைக்காமல் கிடப்பில் இருக்கும் படங்களை ரிலீஸ் செய்வது பற்றியும் கலந்து ஆலோசிக்கப்பட்டது. இந்த நிலையை மாற்ற, தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளதாம். அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகள் ஆரம்பிக்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் 16ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் துவங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும், தற்போது படப்பிடிப்பில் உள்ள திரைப்படங்களின் விவரங்களை தயாரிப்பாளர் சங்கத்திற்கு முறையாக கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும் என்று பேசி முடிவெடுக்கப்பட்டது. ஆகையால் தற்போது நடைபெற்று வரும் படப்பிடிப்புகளை, அக்டோபர் 30-ம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுமாறு தயாரிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முக்கிய பிரச்சினையான நடிகர்களின் சம்பள விவகாரம் குறித்தும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம், இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்து கொண்டே இருக்கின்றன. அதை முறைப்படுத்த பல்வேறு முயற்சி செய்து தமிழ் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியுள்ளது. அதனால் நவம்பர் 1ம் தேதி முதல் தமிழ் சினிமாவின் அனைத்து விதமான படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - தனுஷின் ராயன் மூன்றாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன்

அதேபோல், இனிவரும் காலங்களில் திரைத்துறை சம்பந்தமாக வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளடக்கிய கூட்டுக் குழு (Joint Action Committee) அமைக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow