சினிமா

பிப்ரவரியில் வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படம்? தீர்ப்பு ஒத்திவைப்பு!

'ஜனநாயகன்' திரைப்படத்தின் சென்சார் வழக்கு இன்று விசாரிக்கப்பட்ட நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரியில் வெளியாகும் 'ஜனநாயகன்' திரைப்படம்? தீர்ப்பு ஒத்திவைப்பு!
JanaNayagan Case
நடிகர் விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. தணிக்கைச் சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்டுள்ள இழுபறி காரணமாகத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தனது தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

தணிக்கை வாரியத்தின் வாதம்

இன்று நடைபெற்ற விசாரணையின் போது தணிக்கை வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஜன நாயகன் திரைப்படத்தை மறுதணிக்கை செய்யக் கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் தயாரிப்பு நிறுவனத்தை அணுகினோம். இந்தச் செயல்முறைக்கு இன்னும் 20 நாட்கள் தேவைப்படுகின்றன. ஒருவேளை அதற்குப் பின்பும் சான்றிதழ் வழங்கத் தாமதமானால் மட்டுமே நீதிமன்றத்தை நாட முடியும். இந்த வழக்கைத் தொடராமல் இருந்திருந்தால், இந்நேரம் படம் வெளியாகியிருக்கக் கூடும்" என்று வாதிட்டனர்.

தயாரிப்பு தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகள்

இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தயாரிப்பு நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், "மறுதணிக்கை தொடர்பாகத் தணிக்கை வாரியம் எங்களை முறையாகத் தொடர்பு கொள்ளவே இல்லை. டிசம்பர் 29-ஆம் தேதிக்குப் பிறகு அனைத்துத் தகவல்களும் மறைக்கப்பட்டுள்ளன. தணிக்கை வாரியத்தின் இந்த வெளிப்படைத்தன்மையற்ற செயல்பாடு விதிமீறலாகும். திட்டமிட்டபடி ஜனவரி 9-ஆம் தேதி படம் வெளியாகாததால் எங்களுக்குப் பெரும் பொருளாதார நஷ்டமும், மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

அடுத்தகட்ட நிலை என்ன?

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பைத் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்த பிறகே தணிக்கைச் சான்றிதழ் மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த இறுதி முடிவு தெரியவரும். இதனால், பொங்கல் விடுமுறைக்குப் பிறகாவது படம் வெளியாகும் என்று காத்திருந்த விஜய் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளனர்.

தீர்ப்பு வெளியாகக் கூடுதல் நாட்களாகும் என்பதால், 'ஜன நாயகன்' படத்தின் வெளியீடு பிப்ரவரி மாதத்திற்குத் தள்ளப்படலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.