சினிமா

'திரௌபதி-2' படத்திற்குத் தடையா?- உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு!

'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.

'திரௌபதி-2' படத்திற்குத் தடையா?- உயர் நீதிமன்ற கிளை பரபரப்பு தீர்ப்பு!
Draupathi 2 Case
இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள 'திரௌபதி-2' திரைப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரித் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு முடித்து வைத்துள்ளது.

வரலாற்றுத் திரிபு குறித்த சர்ச்சை

மேலூரைச் சேர்ந்த மகாமுனி அம்பலக்காரர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், "14-ஆம் நூற்றாண்டில் திருவண்ணாமலையைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த மன்னன் வீர வல்லாள தேவன், கள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதற்குப் பல கல்வெட்டுகளும் வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன. ஆனால், 'திரௌபதி-2' படத்தில் அவரை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவராக இயக்குநர் மோகன் தவறாகச் சித்தரித்துள்ளார். இது கள்ளர் சமூகத்தினர் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வரலாற்றுப் பிழையைத் திருத்தாமல் படத்தை வெளியிடக் கூடாது" என்று குறிப்பிட்டிருந்தார்.

ணிக்கை வாரியத்தின் விளக்கம்

இந்த மனு நீதிபதி ஆர். விஜயகுமார் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "திரௌபதி-2 திரைப்படத்தைப் பார்வையிட்ட தணிக்கை வாரியம், கடந்த டிசம்பர் 31-ஆம் தேதியே படத்திற்கு 'யு/ஏ' (U/A) சான்றிதழ் வழங்கிவிட்டது" என்ற தகவலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். படத்தின் உள்ளடக்கம் மற்றும் தணிக்கை நடைமுறைகள் ஏற்கனவே நிறைவடைந்துவிட்டதை அவர் உறுதிப்படுத்தினார்.

நீதிமன்றத்தின் இறுதி உத்தரவு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, "தணிக்கை வாரியம் ஒரு திரைப்படத்தைப் பார்த்து அதற்கு முறைப்படி சான்றிதழ் வழங்கிவிட்ட பிறகு, அதன் வெளியீட்டில் நீதிமன்றம் நேரடியாகத் தலையிட முடியாது" என்று தெரிவித்தார். தணிக்கை செய்யப்பட்ட ஒரு படைப்பின் மீது இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்தார்.

பொதுநல வழக்குத் தொடர அறிவுறுத்தல்

இருப்பினும், மனுதாரரின் தரப்புக் கவலைகளைக் கருத்தில் கொண்ட நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாகத் தேவையான ஆதாரங்களுடன் 'பொதுநல வழக்கு' தொடர மனுதாரருக்கு உரிமை உண்டு என்று கூறி, இந்தத் தனிப்பட்ட மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டது.