சினிமா

உழவர் விருதுகள் 2026: விவசாயிகள் மற்றும் வேளாண் அமைப்புகளை கௌரவித்த நடிகர் கார்த்தி!

விவசாயத் துறைக்காகத் தன்னலமின்றி உழைக்கும் மனிதர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக, ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழா, 7-வது ஆண்டாகச் சென்னையில் நடைபெற்றது.

உழவர் விருதுகள் 2026: விவசாயிகள் மற்றும் வேளாண் அமைப்புகளை கௌரவித்த நடிகர் கார்த்தி!
Uzhavar Viruthugal 2026
விவசாயத் துறைக்காகத் தன்னலமின்றி உழைக்கும் மனிதர்களையும் அமைப்புகளையும் கௌரவிக்கும் விதமாக, ‘உழவன் ஃபவுண்டேஷன்’ சார்பில் வழங்கப்படும் ‘உழவர் விருதுகள்’ வழங்கும் விழா, 7-வது ஆண்டாகச் சென்னையில் நடைபெற்றது.

திரையுலகினர் மற்றும் வேளாண் வல்லுநர்கள் பங்கேற்பு

உழவன் ஃபவுண்டேஷனின் நிறுவனரும் நடிகருமான கார்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், மூத்த நடிகர் சிவகுமார், ரவி மோகன், ரேவதி, கருணாஸ் போன்ற திரைக்கலைஞர்கள் கலந்துகொண்டனர். இவர்களுடன் பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், OFM அனந்து போன்ற வேளாண் வல்லுநர்களும், ஏராளமான மாணவர்களும் பொதுமக்களும் பங்கேற்று விவசாயிகளுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

விருது பெற்றவர்களின் பட்டியல்;

விவசாயத்தின் பல்வேறு பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்குச் சான்றிதழ், கேடயம் மற்றும் தலா ரூ. 2 லட்சம் மதிப்பிலான காசோலை வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

சிறந்த விவசாயி விருது: கோவில்பட்டியைச் சேர்ந்த பழனியம்மாள்.

சிறந்த வேளாண் பங்களிப்பு விருது: மதுரையைச் சேர்ந்த பாமயன்.

சிறந்த வேளாண் கூட்டமைப்பு விருது: வேலூர் மக்கள் நலச்சந்தை.

நீர் நிலைகள் மீட்டெடுத்தலுக்கான விருது: திருப்பூர் ‘வேர்கள்’ அமைப்பு.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விருது: குன்னூரைச் சேர்ந்த ‘க்ளீன் குன்னூர்’.

"விவசாயிகள் கொண்டாடப்பட வேண்டியவர்கள்" - கார்த்தி பேச்சு

விழாவில் உரையாற்றிய நடிகர் கார்த்தி, "நமக்காகத் தொடர்ந்து உழைக்கும் விவசாயிகளை இந்தச் சமூகம் முறையாக அங்கீகரிப்பதில்லை. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மண்ணுக்காக உழைப்பவர்களை அடையாளம் காட்டவே இந்த முயற்சியைத் தொடர்ந்து மேற்கொள்கிறோம். நம் அன்றாட உரையாடல்களில் விவசாயம் பற்றிய பேச்சுக்கள் இருந்தால்தான் சமூகத்தில் மாற்றம் ஏற்படும்" என்று வலியுறுத்தினார்.

விவசாயப் பிரச்னைகள் குறித்த ஆலோசனைகள்

விருது வழங்கும் நிகழ்வோடு மட்டுமல்லாமல், வேளாண் தொழிலாளர்களின் வாழ்வாதாரப் பிரச்னைகள், குப்பை மேலாண்மை, நீர் நிலைகளைப் பாதுகாப்பதன் அவசியம் மற்றும் விவசாயத்தில் பெண்களின் முக்கியத்துவம் குறித்தும் இந்த விழாவில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, சிறுகுறு விவசாயிகளுக்காக உள்ளூர் சந்தைகளை உருவாக்க வேண்டியதன் தேவை குறித்து வல்லுநர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.