உலகம்

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு.. எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!

ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தியில் மீண்டும் பரபரப்பு.. எண்ணெய் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல்!
Oil tanker hit at Hormuz
ஓமன் நாட்டுச் கடலோரப் பகுதியில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் (டேங்கர்) மீது அடையாளம் தெரியாத ஏவுகணை ஒன்று தாக்கப்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உலகளவில் மிக முக்கியமாகக் கருதப்படும் இந்த கடல்வழிப் பாதையில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

கப்பல் மீது தாக்குதல்

பிரிட்டன் கடல்சார் வர்த்தக அமைப்பு (UKMTO) வெளியிட்டுள்ள தகவலின்படி, ஓமனின் லிமா பகுதிக்கு அருகே தெற்கு நோக்கிச் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பலின் இடது பக்கத்தில் ஏவுகணை ஒன்று பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் கப்பலில் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக இந்தத் விபத்தில் யாருக்கும் காயங்களோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்போ ஏற்படவில்லை. இந்தத் தாக்குதல் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே கடந்த வாரம் போடப்பட்ட தற்காலிகத் தாக்குதல் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று இரவு ஈரான் ராணுவம் ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற வணிகக் கப்பல்கள் மீது இரண்டு ஏவுகணைகளை வீசித் தாக்கியுள்ளது. இதில் UKMTO குறிப்பிட்ட எண்ணெய் கப்பல் உட்பட மற்றொரு வணிகக் கப்பலும் கடுமையான சேதமடைந்துள்ளது. இதற்குப் பதிலடியாக ஈரான் இலக்குகள் மீது அமெரிக்கா விரைவில் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

கமேனியின் இறுதிச்சடங்கு

ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கடந்த பிப்ரவரி 28 அன்று அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவரது ஆறு நாள் அரசு இறுதிச்சடங்கு மற்றும் ஊர்வலங்கள் காரணமாகவே கடந்த வாரம் அமெரிக்கா - ஈரான் இடையே தற்காலிகப் போர்நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டது. கமேனியின் உடல் தற்போது கோம் புனித நகரத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், இந்த வார இறுதியில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது.