உலகம்

பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்... அமெரிக்க வரலாற்றில் புதிய மாற்றம்!

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு டிரம்ப் புகைப்படத்துடன் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க வரலாற்றில் முதல் முறை என கூறப்படுகிறது

பாஸ்போர்ட்டில் டிரம்ப் படம்... அமெரிக்க வரலாற்றில் புதிய மாற்றம்!
அமெரிக்கா சுதந்திரம் பெற்று 250 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, அந்நாட்டில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, 250-வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் புதிய பிரத்யேக பாஸ்போர்ட் வெளியிடப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அண்மையில் அறிவித்திருந்தார்.

அதன்படி, டிரம்பின் புகைப்படத்துடன் கூடிய புதிய சிறப்பு பாஸ்போர்ட் வடிவமைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவலை டிரம்ப் தனது சமூக வலைதளப் பதிவின் மூலம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தார்.

இந்த புதிய பாஸ்போர்ட்டின் முகப்பு அட்டை, வழக்கமான வடிவமைப்பில் இருந்து மாறுபட்டு சிறப்பு அம்சங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் முன்பக்கத்தில் ‘United States Of America’ என்ற வார்த்தைகள் பெரிய அளவில் தங்க நிற எழுத்துகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

பாஸ்போர்ட்டின் பின்பக்கத்தில் அமெரிக்க தேசியக்கொடியுடன் நட்சத்திர வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன. அதனுடன் ‘250’ என்ற எண் அச்சிடப்பட்டுள்ளது. இந்த எண், அமெரிக்காவின் 250-வது சுதந்திர ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாஸ்போர்ட்டின் உள் பக்கங்களில் அதிபர் டிரம்பின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதனுடன் தங்க நிறத்தில் அவரது கையெழுத்தும் அச்சிடப்பட்டுள்ளது. டிரம்ப் தனது அலுவலக மேசையில் இரு கைகளையும் ஊன்றி, எதிரில் இருப்பவரை உற்றுநோக்கும் வகையில் இருக்கும் புகைப்படம் இந்த பாஸ்போர்ட்டில் இடம் பெற்றுள்ளது.

அதற்கு எதிர்புறத்தில், அமெரிக்காவின் வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக கருதப்படும் சுதந்திர பிரகடனம் கையெழுத்திடப்பட்ட தருணத்தை நினைவுபடுத்தும் படம் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த பிரத்யேக பாஸ்போர்ட் அனைத்து மக்களுக்கும் வழக்கமான முறையில் வழங்கப்படாது என்றும், வாஷிங்டனில் நேரடியாக விண்ணப்பிக்கும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதனை முன்னிட்டு இந்த சிறப்பு பாஸ்போர்ட்டுகள் விநியோகிக்கப்பட உள்ளன. பொதுவாக ஒரு நாட்டின் பயண ஆவணங்களில் அந்த நாட்டின் சின்னங்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், ஒரு நாட்டின் அதிபரின் புகைப்படம் நேரடியாக இடம்பெறும் பாஸ்போர்ட் வெளியிடப்படுவது அமெரிக்க வரலாற்றில் இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

டிரம்பின் இந்த புதிய பாஸ்போர்ட் வடிவமைப்பு தற்போது சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.