"டிரம்பை கொலை செய்வோம்.." ஈரானில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்கள்!

"டிரம்பை கொலை செய்வோம்.." ஈரானில் வைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட பேனர்கள்!

அமெரிக்க அதிபர் டிரம்பைக் கொல்வோம் எனக் கூறி ஈரானின் டெஹ்ரானில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பட்டு ஏற்படுத்தியுள்ளது.

Author: Christon உலகம்

மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பைக் கொல்வோம் எனப் பிரகடனம் செய்யும் வகையில் ஈரானின் தலைநகர் டெஹ்ரானில் பிரம்மாண்ட விளம்பரப் பலகைகள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெஹ்ரானில் உள்ள முக்கியப் பகுதியான எங்கெலாப் சதுக்கத்தில் வைக்கப்பட்டுள்ள ராட்சத விளம்பரப் பலகையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் தலைகுனிந்து நிற்பது போன்ற படம் இடம்பெற்றுள்ளது. அதன் மேல் "நாங்கள் டிரம்பைக் கொலை செய்வோம்" என்றும் எழுதப்பட்டுள்ளது.

அதனருகே உள்ள மற்றொரு பேனரில், டிரம்ப், அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோரின் முகங்களில் ரத்தக்கறைகளுடனும், கிழிக்கப்பட்ட அமெரிக்க-இஸ்ரேல் கொடிகளின் பின்னணியிலும் படங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி, அமெரிக்க-இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்கக் கோரி, திரளான மக்கள் சிவப்புக் கொடிகளுடன் எங்கெலாப் சதுக்கத்தில் திரண்டனர். மேலும், டெஹ்ரானின் தாஜ்ரிஷ் சதுக்கத்தில் திறந்தவெளி ஓவியக் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு டிரம்ப் சிறைக்கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருப்பது போன்ற நேரடி நடிப்பு நிகழ்வும், அமெரிக்கத் தாக்குதல்களால் ஈரானில் ஏற்பட்ட சேதங்களின் புகைப்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. போர் காலத்தில் பள்ளிக்கூடம் மற்றும் திருமண நிகழ்ச்சிகள் மீது அமெரிக்கா வேண்டுமென்றே தாக்குதல் நடத்தி பொதுமக்கள் உயிரிழப்புக்குக் காரணமாக இருந்ததாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

ஒருபுறம் டிரம்ப் மற்றும் அமெரிக்காவிற்கு எதிராகப் பழிவாங்கும் பேனர்கள் அமைக்கப்பட்டாலும், மறுபுறம் போரை நிறுத்தி அமெரிக்கா மற்றும் ஈரான இடையே பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமெரிக்காவில் இடைக்காலத் தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், ஈரானுடனான அமைதி ஒப்பந்தம் சாத்தியமாகலாம் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருப்பினும், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு ஈரானில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான கருத்துகளைப் பரப்புவதற்கு இதுபோன்ற விளம்பரப் பலகைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.