தமிழ்நாடு

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்க தடையில்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கரூர் சம்பவம்: அரசு வேலை வழங்கத் தடையில்லை! மதுரை உயர் நீதிமன்றக் கிளை அதிரடி உத்தரவு!
Karur Case
கரூரில் இன்று நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணை வழங்கப்பட உள்ள நிலையில், அதற்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில் மதுரை உயர் நீதிமன்றக் கிளை முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகளின் அடுக்கடுக்குக் கேள்விகள்

கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவது குறித்துச் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதா? விபத்தில் சிக்கிப் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் பொருளாதார உதவி தேவைதானே, அதில் அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

மனுதாரர் தரப்பு வாதம்

மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் வாதிடுகையில், "பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கினால், அது இந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்கும் வாய்ப்பாக அமைந்துவிடும். மேலும், இதற்கு முன்பாக நடந்த ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு, தர்மபுரி பேருந்து எரிப்புச் சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இதுபோன்று அரசுப் பணிகள் வழங்கப்படவில்லை" என்று தனது தரப்பு நியாயங்களை முன்வைத்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கரூரில் இன்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்குக் கடுமையான தடை எதுவும் விதிக்க முடியாது என மறுத்துவிட்டனர். இருப்பினும், "இன்று வழங்கப்படும் பணி நியமன ஆணைகள் அனைத்தும் தற்காலிகமானதாகவே இருக்க வேண்டும்; அந்தப் பணிகளின் நிரந்தரத் தன்மை இந்த வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது" என்று நிபந்தனை விதித்தனர். மேலும், இந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அமைப்பை எதிர்மனுதாரராகச் சேர்க்க உத்தரவிட்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.