இந்தியா

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!

திரிணமூல் காங்கிரஸ் பிளவுபட்டுள்ள நிலையில் மமதா பானர்ஜி பிரிவுக்கு புதிய சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.

மேற்கு வங்க இடைத்தேர்தல்.. மமதா பானர்ஜி அணிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு!
TMC
மேற்கு வங்கத்தில் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலை முன்னிட்டு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இரு பிரிவுகளுக்கும் தனித்தனி பெயர்கள் மற்றும் சின்னங்களை தேர்தல் ஆணையம் இன்று ஒதுக்கியுள்ளது.

சின்னங்கள் ஒதுக்கீடு

அருப் ராய் தலைமையிலான பிரிவுக்கு "டெமாக்ரடிக் திரிணாமுல் காங்கிரஸ்" (Democratic Trinamool Congress) என்ற பெயரும், "உறை" (Envelope) சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், மம்தா பானர்ஜி தலைமையிலான பிரிவுக்கு "மம்தா அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்" (Mamata All India Trinamool Congress) என்ற பெயரும், "கால்பந்து வீரர்" (Football Player) சின்னமும் வழக்கப்பட்டிருக்கிறது. மேற்கு வங்கம், மேகலாயா மற்றும் திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் இவ்விரு பிரிவுகளும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாகக் கருதப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கட்சியின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றுவதில் ஏற்பட்ட உள்கட்சி மோதல் காரணமாக, 'அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ்' என்ற பெயரையும், அதன் 'இரட்டைப் பூக்கள்' சின்னத்தையும் முடக்கித் தேர்தல் ஆணையம் இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது.

இடைத்தேர்தல் பின்னணி

நடைபெறவுள்ள நந்திகிராம் மற்றும் ரேஜிநகர் இடைத்தேர்தலில் எந்தவொரு பிரிவும் மூலக் கட்சியின் பெயரையோ அல்லது சின்னத்தையோ பயன்படுத்த அனுமதி இல்லை. முதலமைச்சர் சுவேந்து அதிகாரி பவாப்பூர் தொகுதியைத் தக்கவைத்துக்கொண்டு நந்திகிராம் தொகுதியை ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் வந்தது. அதேபோல், ஆம் ஜனதா வளர்ச்சித் கட்சியின் (AJUP) நிறுவனர் ஹுமாயூன் கபீர் தனது பதவியை ராஜினாமா செய்ததால் ரேஜிநகர் தொகுதி காலியானது.

இந்த இடைத்தேர்தல்களில் இரு பிரிவுகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும், புதிதாக ஒதுக்கப்பட்ட பெயர்கள் மற்றும் சின்னங்களின் கீழேயே போட்டியிட அனுமதிக்கப்படுவார்கள். இறுதி உத்தரவு வரும் வரை இந்த ஒதுக்கீடு தற்காலிகமாக அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்கட்சி மோதலின் பின்னணி

கட்சியின் தேசிய செயற்குழுவின் செல்லுபடித் தன்மை மற்றும் நிர்வாகிகள் நியமனம் தொடர்பான கருத்து வேறுபாடுகளே இந்த மோதலுக்கு முக்கியக் காரணமாகும். தற்போதைய தேசிய செயற்குழுவின் பதவிக் காலம் 2025 பிப்ரவரி 11-உடன் முடிவடைந்துவிட்டதாக அருப் ராய் தலைமையிலான பிரிவு வாதிடுகிறது.

ஆனால், கட்சி விதிகளில் செய்யப்பட்ட திருத்தங்கள் மூலம் செயற்குழுவின் பதவிக் காலம் 3 ஆண்டுகளில் இருந்து 5 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளதாக மமதா பானர்ஜி தரப்பு மற்றும் எம்பி டெரெக் ஓ பிரையன் ஆகியோர் கூறுகின்றனர். இந்தத் திருத்தங்களின் செல்லுபடித் தன்மையை எதிரத்தரப்பு மறுத்து வருகிறது. எந்தப் பிரிவு உண்மையான கட்சி என்பதைத் தீர்மானிக்க விசாரணை தேவை என்பதால், இடைக்கால ஏற்பாடாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.