இந்தியா

UPI கட்டண விவகாரத்தில் அமெரிக்க அழுத்தமா? மத்திய அரசு கூறுவது என்ன?

யூபிஐ பரிவர்த்தனைகளுக்கு வர்த்தகத் தள்ளுபடி வீதம் (MDR) கட்டணம் அமல்படுத்துவது அமெரிக்க நிறுவனங்களுக்குப் பயனளிப்பதற்காகவே என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

UPI கட்டண விவகாரத்தில் அமெரிக்க அழுத்தமா? மத்திய அரசு கூறுவது என்ன?
UPI
அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து யூபிஐ விவகாரத்தில் மத்திய அரசு கட்டணம் அமல்படுத்துவதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்திய யூபிஐ மற்றும் ரூபே (RuPay) தளங்களின் பிரம்மாண்ட வளர்ச்சியால், விசா (Visa) மற்றும் மாஸ்டர்கார்டு (Mastercard) போன்ற அமெரிக்க நிறுவனங்கள் சந்தையில் பெரும் பின்னடைவைச் சந்தித்ததாகவும், அந்த வெளிநாட்டு நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காகவே இந்த புதிய கட்டண முறை கொண்டுவரப்படுவதாகவும் காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் சாடியிருந்தார்.

எதிர்க்கட்சிகளின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள மத்திய நிதி அமைச்சகம், "யூபிஐ தொடர்பான முடிவுகள் அனைத்தும் நாட்டின் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நீடித்த வளர்ச்சிக்கு வழிவகுக்கவும் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதில் எவ்வித வெளிநாட்டுத் தலையீடும் அல்லது அழுத்தமும் இல்லை" எனத் தெரிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 15 முதல், ரூ.2,000-க்கு மேல் மேற்கொள்ளப்படும் வர்த்தகப் பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் (அதிகபட்சமாக ரூ.300) விதிக்கப்படும். மாதம் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக யூபிஐ மூலம் பணம் பெறும் வணிகர்கள் மட்டுமே இந்த வரம்பிற்குள் வருவார்கள். தனிநபர்களுக்கு இடையேயான பரிவர்த்தனைகளுக்கும், சாதாரணக் கடைகளில் QR கோட் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கும் எப்போதும் போலக் கட்டணம் கிடையாது. 95% பரிவர்த்தனைகள் ரூ.2,000-க்கு குறைவாகவே இருப்பதால் சாதாரணக் கடைக்காரர்களோ அல்லது நுகர்வோரோ பாதிக்கப்பட மாட்டார்கள் என்றும், இந்தக் கட்டணத்தை வாடிக்கையாளர்கள் மீது சுமத்தக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த MDR கட்டணம் அரசுக்கோ அல்லது யூபிஐ அமைப்பை இயக்கும் என்பிசிஐ (NPCI) நிறுவனத்திற்கோ செல்லும் வரி அல்ல என்றும் நிதி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது. யூபிஐ கட்டமைப்பு, தொழில்நுட்பப் பராமரிப்பு மற்றும் வங்கிகளின் செயல்பாட்டுச் செலவுகளை ஈடுகட்டவே இந்த நிதி பயன்பாட்டுப் பங்கேற்பாளர்களுக்கு இடையே பகிர்ந்தளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.