இந்தியா

விக்கு வைத்து ரூ.30 கோடி மோசடி.. பலே கில்லாடியை மடக்கி பிடித்த போலீசார்!

பங்குச்சந்தையில் மாதம் 5% லாபம் தருவதாகக் கூறி ரூ.30 கோடி மோசடி செய்த நபரை குஜராத்தில் காவல்துறையினர் கைது செய்தனர்.

விக்கு வைத்து ரூ.30 கோடி மோசடி.. பலே கில்லாடியை மடக்கி பிடித்த போலீசார்!
Wig 3 Aliases Rs 30 Crore Scam
பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் மாதம் 5 சதவீத லாபம் தருவதாகக் கூறி முதலீட்டாளர்களிடம் ரூ.30 கோடிக்கும் மேல் மோசடி செய்த 56 வயது நபரை பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் குஜராத்தில் கைது செய்துள்ளனர். தனது அடையாளத்தை மறைக்க விக்கு அணிந்தும், மூன்று வெவ்வேறு பெயர்களில் வாழ்ந்தும் வந்த நபரைத் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு காவல்துறையினர் பிடித்துள்ளனர்.

ரோஷன் பூஷன் சேத் என்ற அந்த நபர், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த 42 முதலீட்டாளர்களை ஏமாற்றி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதில் கிடைத்த பணத்தைக் கொண்டு சொகுசு வீடுகள், விலை உயர்ந்த கார்கள் மற்றும் சொகுசு கடிகாரங்களை வாங்கி ஆடம்பரமாக வாழ்ந்து வந்துள்ளார். பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறுவது போலப் போலியான கணக்கு அறிக்கைகளைக் காட்டி முதலீட்டாளர்களை அவர் நம்ப வைத்துள்ளார். நேரடியாகப் பெறப்பட்ட அசல் முதலீடு ரூ.5 கோடி என்றாலும், ஒரு வெளிநாடு வாழ் இந்திய பெண் உட்பட பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்ட ஒட்டுமொத்த இழப்பு சுமார் ரூ.30.26 கோடியாகும்.

மும்பை கண்டிவலியைச் சேர்ந்த சஞ்சய் ஹிராலால் ஷா (60) என்பவர் தனது குடும்பத்திடமிருந்து ரூ.10.81 கோடி ஏமாற்றப்பட்டதாக மும்பை காவல் ஆணையரிடம் அளித்த புகாரின் பேரில் இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த 2020-ஆம் ஆண்டு, சஞ்சய்யின் மென்பொருள் பொறியாளரான மகனிடம் 'Investok' என்ற வர்த்தக செயலியை உருவாக்குவதாகக் கூறி ரோஷன் அறிமுகமாகியுள்ளார். பின்னர் அந்த குடும்பத்தாரைப் பெருந்தொகையை முதலீடு செய்ய வைத்துள்ளார். தொடக்கத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த ரூ.3.8 கோடி வரை சிறு சிறு லாபத் தொகையாகக் கொடுத்து வந்தவர், 2025 டிசம்பரில் பணத்தைக் கொடுப்பதை நிறுத்திவிட்டு தலைமறைவானார்.

தொழில்நுட்பக் கண்காணிப்பு மூலம் ரோஷன் குஜராத்தின் வல்சாத் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பு கட்டிடத்தில் இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து மூன்று நாட்கள் அங்கே முகாமிட்ட பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் போல வேடமணிந்து வீட்டிற்குள் நுழைந்து அவரை அதிரடியாகக் கைது செய்தனர். விசாரணையில் அவர் ஜெயேஷ் ஹஸ்முக்பாய் ஷா, ராகுல் அதுல்பாய் பரேக் மற்றும் ரோஷன் பூஷன் சேத் ஆகிய மூன்று வெவ்வேறு பெயர்களில் ஆள்மாறாட்டம் செய்து வாழ்ந்தது தெரியவந்தது.

அவரிடமிருந்து பிஎம்டபிள்யூ, மெர்சிடிஸ், மஹிந்திரா தார் ஆகிய கார்கள், 14 சொகுசு கடிகாரங்கள், ரூ.1.67 கோடி மதிப்பிலான தங்க நகைகள், ரூ.17 லட்சம் ரொக்கம் மற்றும் 3 வீடுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்து முடக்கியுள்ளனர். செப்டம்பர் 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் 37 சாட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் அவரது விக்கை பராமரித்த அழகு நிலைய ஊழியர்களும் சாட்சிகளாகச் சேர்க்கப்பட்டு அடையாளத்தை உறுதி செய்ய உதவியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட பிற முதலீட்டாளர்களும் ஆதாரங்களுடன் முன்வருமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.