ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்..! 'சீயான் 63' டைட்டில் ப்ரொமோ வெளியானது!

ஃபுல் மீல்ஸ் கொடுத்துதான் அனுப்புவேன்..! 'சீயான் 63' டைட்டில் ப்ரொமோ வெளியானது!

நடிகர் விக்ரமின் 63 வது படத்தின் டைட்டில் ப்ரொமோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Author: Christon சினிமா
'வீர தீர சூரன்' திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் நடிக்கும் 63-வது திரைப்படத்தின் தலைப்பு மற்றும் டைட்டில் டீசரை தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி பிலிம்ஸ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 'இருமுகன்' படத்திற்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் ஷங்கர் மற்றும் விக்ரம் மீண்டும் இணைந்துள்ள இந்தப் படத்திற்கு 'பவர் ஹவுஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

வெளியாகியுள்ள டைட்டில் டீசரின் படி, கேட்டரிங் சர்வீஸ் நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவராக விக்ரம் நடித்துள்ளார். ஆரம்பத்தில் சமையல்காரராக அறிமுகமாகும் அவரது கதாபாத்திரம், பின்னர் அதிரடி ஆக்‌ஷன் அவதாரமெடுக்கும் வகையில் கதைக் களம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கதாபாத்திரத்திற்காகத் தனது உடலமைப்பைக் கட்டுமஸ்தாக மாற்றி விக்ரம் எடுத்துள்ள புதிய தோற்றம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

மலையாளத்தில் 'சர்வம் மாயா' படத்தின் மூலம் கவனத்தைப் பெற்ற ரியா ஷிபு, இப்படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இவர் 'வீர தீர சூரன்' தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸின் மகள் ஆவார். மேலும் ஊர்வசி, எம்.எஸ். பாஸ்கர், விடிவி கணேஷ், சம்யுக்தா ஹெக்டே மற்றும் ஷம்மி திலகன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். 'மகான்' படத்திற்குப் பிறகு சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

சமீபத்தில் எளிமையான பூஜையுடன் தொடங்கிய இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த ஜூன் மாதத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. விரைவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பைத் தொடங்கப் படக்குழு ஆயத்தமாகி வருகிறது. மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி வரும் 'பவர் ஹவுஸ்' திரைப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.