இந்தியா

BRICS Summit: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு.. டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்!

18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க ரஷ்ய அதிபர் புதின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார்.

BRICS Summit: 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாடு.. டெல்லி வந்தடைந்தார் ரஷ்ய அதிபர் புதின்!
Vladimir Putin
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கத்துவம் வகிக்கும் பிரிக்ஸ் (BRICS) அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நாளை (செப்டம்பர் 12) மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இம்மாநாட்டை இந்தியா 4-வது முறையாகத் தலைமை தாங்கி நடத்துகிறது.

உலகத் தலைவர்கள் பங்கேற்பு

இம்மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோஸா, ஈரான் அதிபர் மசூத் பெஜெஷ்கியான், எகிப்து அதிபர் அப்தேல் ஃபத்தா எல்-சிசி, எத்தியோப்பியா பிரதமர் அபி அகமது, இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ, ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் பிரேசில் வெளியுறவு அமைச்சர் மவுரோ வியிரா உள்ளிட்ட சர்வதேசத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர்.

ரஷ்ய அதிபருக்கு உற்சாக வரவேற்பு

மாநாட்டில் பங்கேற்பதற்காக மாஸ்கோவில் இருந்து தனி விமானம் மூலம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு நேரில் சென்ற மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், கோண்டா தொகுதி எம்பியுமான கே.வி. சிங் அவரை வரவேற்றார். புதினின் வருகையை முன்னிட்டுத் தலைநகர் டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் பதிவு

ரஷ்ய அதிபர் புதின் வருகை குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தனது எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், 18-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டிற்கு வருகை தந்துள்ள ரஷ்ய அதிபரை அன்புடன் வரவேற்பதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்தியாவும் ரஷ்யாவும் சிறப்பு மற்றும் முன்னுரிமை பெற்ற உத்திசார் கூட்டாண்மையின் அடிப்படையில் பல்வேறு துறைகளில் நீண்டகாலமாக வலுவான இருதரப்பு உறவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.