இந்தியா

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!

சி.எம்.ஆர்.எல் லஞ்ச வழக்கில் பினராயி விஜயன் மகள் வீணாவின் ரகசிய டைரி மற்றும் ஹவாலா பரிவர்த்தனை ஆதாரங்களை அமலாக்கத்துறை கேரள டிஜிபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.

CMRL- எக்ஸாலாஜிக் லஞ்ச வழக்கு: அம்பலப்படுத்திய அமலாக்கத்துறை.. பினராயி விஜயன் மகளுக்கு சிக்கல்!
ED

கேரள முன்னாள் முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், அவரது மகள் வீணா விஜயன் மற்றும் அவரது மருமகனும் முன்னாள் அமைச்சருமான முகமது ரியாஸ் ஆகியோர் மீது சி.எம்.ஆர்.எல் கனிமவள நிறுவனத்திடமிருந்து லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரில் அமலாக்கத்துறை (ED) தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யக் கோரி, 25 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை மாநிலக் காவல் துறைத் தலைவருக்கு (DGP) அமலாக்கத்துறை அனுப்பியுள்ளது.

கடந்த மே 27 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வீணா விஜயனின் வாடகை வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட "ரெட் புக்" என்ற ரகசிய டைரி மற்றும் வாட்ஸ்அப் உரையாடல்கள் மூலம் சட்டவிரோதப் பரிவர்த்தனைகள் தெரியவந்துள்ளன. கடந்த 2024 செப்டம்பர் 17 அன்று இந்தியாவில் இருந்து ரூ.85 லட்சம் ஹவாலா மூலம் அனுப்பப்பட்டு, அதில் 3.49 லட்சம் அமீரக திர்ஹம்களை துபாயில் பைஜாஸ் என்பவர் பெற்றுள்ளார். மேலும், அந்த டைரியின் 2-ஆம் பக்கத்தில் பைஜாஸின் 'மஷ்ரக்' (Mashreq) வங்கிக் கணக்கிற்கு மொத்தம் 1,46,600 மாற்றப்பட்டதாகக் கைப்பட எழுதப்பட்டக் குறிப்புகளும் சிக்கியுள்ளன.

முன்னாள் அமைச்சர் முகமது ரியாஸின் வழிகாட்டுதலின் படி ரூ.1.2 கோடி ஹவாலா வழியில் துபாய்க்கு அனுப்பப்பட்டதாக அவரது நண்பர் கே. வாரிஸ் வாக்குமூலம் அளித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் வாட்ஸ்அப் உரையாடல்களின் படங்களை அமலாக்கத்துறை டிஜிபி-க்கு சமர்ப்பித்துள்ளது. மேலும், 'நம்மள் பேப்பூர் கோர் டீம்' என்ற 16 பேர் கொண்ட வாட்ஸ்அப் குழுவில் முகமது ரியாஸ், அவரது செயலாளர்களான மிதுன் கிச்சு, விபின் ஆகியோருடன் ஹவாலா சந்தேக நபர்களான வி.பி. பைஜாஸ், கே. ஷைஜால் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். துபாயில் பினாமி ஆடை நிறுவனம் தொடங்க மே 2024-இல் வீணாவும் ரியாஸும் சென்றதாகவும் கூறப்படுகிறது.

விசாரணையின் தொடர்ச்சியாக, முகமது ரியாஸின் நண்பர் பெபீஷின் கோழிக்கோடு வங்கி லாக்கரிலிருந்த 50 பவுன் நகைகளைக் கண்டறிந்த அமலாக்கத்துறை அதற்குச் 'சீல்' வைத்துள்ளனர். இக்குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள முகமது ரியாஸ், தங்கள் குடும்பத்தின் பெயரைக் கெடுக்க உருவாக்கப்பட்ட போலித் திரைக்கதை இது என்றும், உண்மையான ஆதாரங்களாக இருந்தால் ஊடகங்களுக்குக் கசியவிட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமலாக்கத்துறையிடம் இருந்து வந்த 25 பக்கக் கடிதம் மற்றும் எஃப்.ஐ.ஆர் கோரிக்கை குறித்துப் பேசிய மாநிலக் காவல் துறைத் தலைவர் ரவாடா ஏ. சந்திரசேகர், இந்தக் கடிதத்தை மேலதிக நடவடிக்கைக்காக மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அங்கிருந்து வரும் வழிகாட்டுதல்களின்படி அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.