இந்தியா

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !

தெரு நாய் தொல்லையை கட்டுப்படுத்தக் கோரி, நகராட்சி அதிகாரியின் அறைக்குள்ளேயே நாய்களை அவிழ்த்து விட்டு யுவசேனா நடத்திய போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகராட்சி அலுவலகத்தில் நாய்களின் Suprise Visit ! மராட்டியத்தில் நூதன போராட்டம் !
Yuvasena's Unique Protest : Stray Dog Menace
மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் தெரு நாய் தொல்லைக்கு எதிர்ப்பு தெரிவித்து, யுவசேனா அமைப்பினர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நகராட்சி அதிகாரியின் அலுவலக அறைக்குள் தெரு நாய்களை கொண்டு சென்று அவிழ்த்து விட்டதால் அங்கு இருந்த அதிகாரிகள், ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

அதிகரித்த தெரு நாய் தொல்லை... பொதுமக்கள் அச்சம் :

மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் நிபத் நகராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தெரு நாய்களின் தொல்லை அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

சாலைகளில் கூட்டமாக சுற்றித் திரியும் நாய்களால் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் பாதிக்கப்படுவதாகவும், பலர் நாய் கடியால் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

பலமுறை புகார்... நடவடிக்கை இல்லை என குற்றச்சாட்டு :

தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என யுவசேனா அமைப்பினர் நிபத் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்ததாக தெரிவித்தனர். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என அவர்கள் குற்றம்சாட்டினர்.

இதனால், நகராட்சி நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதிகாரி அறைக்குள் நாய்களை விட்ட யுவசேனா :

நாசிக் மாவட்ட யுவசேனா தலைவர் விக்ரம் ரந்தாவே தலைமையில் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் நிபத் நகராட்சி அலுவலகத்திற்கு வந்தனர்.

அப்போது, அவர்கள் சாக்குகளில் கொண்டு வந்திருந்த சில தெரு நாய்களை திடீரென நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரேவின் அலுவலக அறைக்குள் அவிழ்த்து விட்டனர்.

அலுவலகத்திற்குள் நாய்கள் சுற்றித் திரிந்ததால் அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பதற்றமடைந்து நாலாபுறமும் ஓடினர். இதனால் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ரூபாய் நோட்டு மாலை அணிவித்து எதிர்ப்பு :

தொடர்ந்து, நகராட்சி அதிகாரியின் மேசைக்கு ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட மாலையை அணிவித்து, பொதுமக்களின் பிரச்சினைகளில் நிர்வாகம் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும் என யுவசேனா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த வித்தியாசமான போராட்டத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை: அதிகாரி உறுதி :

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நிபத் பகுதியில் தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி தலைமை அதிகாரி தீரஜ் பாம்ரே உறுதி அளித்தார்.

மேலும், தெரு நாய்களுக்கு கருத்தடை செய்யும் பணிகளை தீவிரப்படுத்தவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டது.

அதிகாரியின் உறுதியை தொடர்ந்து, யுவசேனா அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.