இன்ஸ்டாகிராம் ரீலிஸ்-ஆல் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக, பள்ளியின் வகுப்பறைக்கு வெளியே 9-ஆம் வகுப்பு மாணவி சக மாணவரால் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புனே பாலேவாடி பகுதியில் உள்ள ஒரு பிரபல ஆங்கில வழிப்பள்ளியில் நேற்று (அக்.23) இந்தச் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பள்ளிச் சுற்றுலா சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டது தொடர்பான தகராறுதான் இந்த விபரீதத்தில் முடிந்துள்ளது.
கடந்த அக்டோபர் 17 மற்றும் 18 தேதிகளில் இப்பள்ளி மாணவர்கள் பஞ்ச்கனி மற்றும் மகாபலேஷ்வர் பகுதிகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது மாணவி ஒருவர் நடனமாடியதைச் சிறுவன் ஒருவன் தனது செல்போனில் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்துள்ளான்.
இதைக் கண்ட சக மாணவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து, அந்த வீடியோவை உடனடியாக நீக்கும்படி சிறுவனுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். இதனால் மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் நாளடைவில் முற்றியுள்ளது.
இந்நிலையில், நேற்று பிற்பகல் 2.15 மணியளவில் வகுப்பறைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த 14 வயது மாணவி மீது, அதே வகுப்பில் படிக்கும் மற்றொரு 14 வயது மாணவன் திடீரெனத் தான் மறைத்து எடுத்துவந்த கத்தியால் முகம் மற்றும் மார்பில் சரமாரியாகக் குத்தியுள்ளான்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த மாணவியைக் கண்ட பள்ளி நிர்வாகத்தினர் உடனடியாக அதிர்ந்துபோய், அவரது குடும்பத்தினருக்கும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே மீட்கப்பட்ட சிறுமி பானரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிர்ஷ்டவசமாக அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதால், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தியைக் கைப்பற்றினர். மேலும், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனைக் கைது செய்து சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
LIVE 24 X 7









