கர்நாடகாவில் காலியாக இருந்த 4 சட்ட மேலவை (MLC) இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில், ஆளும் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாமல் முழுமையான தோல்வியைச் சந்தித்துள்ளது. பாஜக - ஜேடிஎஸ் கூட்டணி அனைத்து இடங்களையும் கைப்பற்றி அதிரடி காட்டியுள்ளது.
கர்நாடகாவில் உள்ள வடகிழக்கு ஆசிரியர் தொகுதி, தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதி, மேற்கு பட்டதாரிகள் தொகுதி மற்றும் பெங்களூரு ஆசிரியர் தொகுதி ஆகிய 4 மேலவை இடங்களுக்குக் கடந்த அக்டோபர் 23-ஆம் தேதி வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளன.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், வடகிழக்கு ஆசிரியர் தொகுதியில் பாஜகவின் சஷில் ஜி நமோஷி 5-வது முறையாக வென்று சாதனை படைத்துள்ளார். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் சொந்த மாவட்டமான கலபுரகியை உள்ளடக்கிய இத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சரணப்பா மத்துரை அவர் வீழ்த்தினார்.
அதேபோல, தென்கிழக்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் கே.எம். சுரேஷும், மேற்கு பட்டதாரிகள் தொகுதியில் பாஜகவின் எஸ்.வி. சங்கனூரும் வெற்றி பெற்றனர். பெங்களூரு ஆசிரியர் தொகுதியில் கூட்டணி கட்சியான ஜேடிஎஸ் வேட்பாளர் ஏ.பி. ரங்கநாத் வெற்றி வாகை சூடினார்.
முதல்வர் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் ஏமாற்றத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்துள்ளன. ஆளும் அரசு மீதான மக்களின் அதிருப்தியையே இந்த முடிவுகள் காட்டுவதாகவும், வரவிருக்கும் மாநகராட்சித் தேர்தலிலும் இதே நிலைதான் தொடரும் என்றும் பாஜக தலைவர்கள் விமர்சித்து வருகின்றனர்.
LIVE 24 X 7









