காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி வியாழக்கிழமை இன்ஸ்டாகிராமில் இணைந்தார். தனது முதல் பதிவிலேயே, நவம்பர் 10-ம் தேதி வெளியாகவுள்ள ‘Belonging: A Journey of Love’ என்ற நினைவுக் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தின் முதல் தோற்றத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
79 வயதான சோனியா காந்தி, தனது பதிவில், “அனைவருக்கும் வணக்கம். இந்தப் புத்தகத்தின் முதல் தோற்றத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இது அன்பு, கடமை, இழப்பு மற்றும் தனக்கான ஓர் இடத்தைக் கண்டறிவது பற்றிய கதை. இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
குழந்தைப் பருவம் முதல் ராஜீவ் காந்தி வரையிலான பயணம்!
இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, தனது குழந்தைப் பருவம் முதல் இந்தியாவில் வாழத் தொடங்கியது வரையிலான அனுபவங்களை இந்த நூலில் பதிவு செய்துள்ளார். 1965-ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜில் படித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ராஜீவ் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவருக்கு 19 வயது. இருவரும் 1968-ம் ஆண்டு பிப்ரவரி 25-ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
ராஜீவ் காந்தியுடனான காதல், திருமண வாழ்க்கை, மாமியாரும் முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் படுகொலை, கணவர் ராஜீவ் காந்தியின் படுகொலை உள்ளிட்ட வாழ்க்கையின் கடினமான தருணங்கள் இந்த நினைவுக் குறிப்புகளில் இடம்பெற்றுள்ளன.
காங்கிரஸ் கட்சியின் நீண்டகாலத் தலைவராகப் பணியாற்றிய சோனியா காந்தி, நேரு-காந்தி குடும்பத்தின் ஓர் உறுப்பினராகவும் இந்தியாவில் தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டவராகவும் எதிர்கொண்ட அனுபவங்களையும் இந்த நூல் விவரிக்கிறது.
தாயின் புத்தகம் குறித்து பெருமிதம் தெரிவித்த ராகுல் காந்தி!
சோனியா காந்தியின் புத்தகம் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் ஏற்கெனவே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தனது தந்தை ராஜீவ் காந்தியின் 82-வது பிறந்தநாளில் வெளியிட்ட பதிவில், தனது தாயின் வாழ்க்கைக் கதை கோடிக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய இருப்பதில் பெருமிதம் கொள்வதாகக் குறிப்பிட்டிருந்தார்.
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள விரும்பாத தனது தாய்க்கு, இந்தக் கதையை உலகத்துடன் பகிர்வது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதையும் ராகுல் காந்தி தனது பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவில் புத்தக வெளியீட்டில் சர்ச்சை!
சர்வதேச அளவில் இந்தப் புத்தகத்தை Alfred A. Knopf நிறுவனம் நவம்பர் 10-ம் தேதி வெளியிடுகிறது. ஆனால், இந்தியப் பதிப்பை வெளியிடுவது தொடர்பாக ஆரம்பத்தில் சிக்கல் ஏற்பட்டது. Penguin Random House India நிறுவனத்துக்கும் சோனியா காந்தியின் பிரதிநிதிகளுக்கும் இடையே புத்தகத்தின் உள்ளடக்கம் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
வழக்கமான தலையங்க ஆய்வின்போது ஒரு விவகாரத்தில் மட்டும் உடன்பாடு ஏற்படவில்லை என்று பென்குயின் இந்தியா தெரிவித்தது. மேலும், புத்தகத்தின் வெளியீடு தொடர்பான முடிவில் வெளிப்புற அழுத்தம் எதுவும் இல்லை என்றும் அந்த நிறுவனம் மறுத்தது.
மோடி, ஆர்.எஸ்.எஸ். குறித்த பகுதிகளால் அரசியல் சர்ச்சை!
புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக் சங்கம் (RSS) மற்றும் மோடி தலைமையிலான ஆட்சிக் காலத்தில் இந்தியப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்தது தொடர்பான தகவல்கள் இடம்பெற்றிருந்ததாகவும், அவற்றை நீக்க அழுத்தம் கொடுக்கப்பட்டதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டினர். ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் அசோக் கெலாட் இந்த விவகாரத்தை “ஜனநாயகத்தின் படுகொலை” என்று விமர்சித்தார்.
ஆனால், வெளிப்புறத் தலையீடு இருந்ததாகக் கூறப்படுவதை பென்குயின் இந்தியா மறுத்தது. இதற்கிடையில், இந்தியப் பதிப்பை வெளியிட HarperCollins India நிறுவனம் முன்வந்துள்ளது. இதனால், சர்வதேச வெளியீட்டு நாளான நவம்பர் 10-ம் தேதியே இந்தியாவிலும் புத்தகம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சோனியா காந்தியின் இன்ஸ்டாகிராம் அறிமுகமும், அவரது வாழ்க்கைப் பயணத்தைப் பதிவு செய்யும் இந்த நூலும் தற்போது கவனம் ஈர்த்துள்ளன.
LIVE 24 X 7









