நிழல் உலக தாதாவின் சகோதரனை தட்டி தூக்கிய காவல்துறை.. நடந்தது என்ன?
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
நிழல் உலகின் தாதாவான லாரன்ஸ் பிஷ்னோய் இந்தியாவின் வடமாநிலங்களில் பலரை மிரட்டி பணம் பறிப்பது, கொலை மிரட்டல் உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். இவர் தற்போது குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இருந்தாலும் அங்கிருந்து பல்வேறு குற்றச்சம்பவங்களுக்கு தலைமை தாங்கி வருவதாக கூறப்படுகிறது.
லாரன்ஸ் பிஷ்னோய் மட்டுமல்லாமல் அவரது சகோதரர் அன்மோல் பிஷ்னோய்யும் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இவர், லாரன்ஸ் பிஷ்னோய் நண்பரான கோல்டி பிரருடன் இணைந்து இந்தியாவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவர்களது கூட்டத்தில் 700 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த 2022-ஆம் ஆண்டு பிரபல பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அன்மோல் பிஷ்னோய்-க்கு தொடர்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. மேலும், அரசியல் காரணங்களால் இந்த கொலை நடைபெற்றதாகவும் தகவல் வெளியானது.
அதுமட்டுமல்லாமல், மகராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கிலும் அன்மோல் பிஷ்னோய் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். தொடர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானின் மும்பை வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவருக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட வழக்குகளில் லாரன்ஸ் பிஷ்னோய் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் தேடப்பட்டு வந்தார்.
இந்தியாவில் அன்மோல் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த இரண்டு வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் உள்ளன. இதையடுத்து அன்மோலை தேடி கண்டுபிடிக்க மும்பை போலீசார், மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கைது வாரண்ட் பெற்றனர்.
அதன் அடிப்படையில் மத்திய விசாரணை ஏஜென்சி சர்வதேச போலீஸார் மூலம் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிட்டது. அதோடு அன்மோல் குறித்த தகவல்களை கொடுத்தால் 10 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் மத்திய விசாரணை ஏஜென்சி தெரிவித்தது.
இந்நிலையில் அன்மோல் பிஷ்னோய் போலி பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்கு தப்பிச்சென்றதாக தகவல் கிடைத்தது. அவரை கைது செய்து இந்தியாவிற்கு அனுப்பும்படி மத்திய அரசு அமெரிக்காவிடம் கோரியது. இந்த சூழலில் அன்மோல் கலிபோர்னியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கனடா நாட்டில் கடந்தாண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக அன்மோல் பிஷ்னோயிடம், கலிபோர்னியா போலீசார் விசாரணை மேற்கொள்வார்கள் என்றும் இந்திய அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்த முயன்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?