இந்தியா

டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் விழா.. 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!

டெல்லியில் உள்ள மத்திய இணையமைச்சர் எல். முருகன் வீட்டில் நடைபெற்று வரும் பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ளார். மேலும், பாஜக தலைவர்களுடன், நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி மோகன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

டெல்லியில் பிரதமர் மோடி பொங்கல் விழா.. 'பராசக்தி' படக்குழு பங்கேற்பு!
Parasakthi Crew in PM Modi Pongal Celebration
நாளை பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ள நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன் தனது டெல்லி இல்லத்தில் இன்று பொங்கல் விழாவைச் சிறப்பாக நடத்தினார். இல்லம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலைகள், வாழை மரங்கள் மற்றும் மாவிலைத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு, ஒரு குட்டித் தமிழகமாகவே காட்சியளித்தது. இந்த விழாவில் சிலம்பாட்டம், கரகாட்டம் மற்றும் தப்பாட்டம் எனத் தமிழகத்தின் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.

பொங்கல் வைத்து வழிபட்ட பிரதமர் மோடி

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்த பசுக்கன்றுகளுக்கு உணவு வழங்கித் தனது அன்பை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய பிரதமர், அங்கு கூடியிருந்தவர்களுடன் பொங்கல் திருநாளைக் கொண்டாடினார். இவ்விழாவில் பேசிய பிரதமர், "பொங்கல் என்பது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் உன்னதமான விழா. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கங்கை கொண்ட சோழபுரத்தில் இது விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பண்டிகையான இன்று, எனது தமிழ் சகோதர சகோதரிகள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

டெல்லியில் 'பராசக்தி' படக்குழு

இந்த விழாவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, கலை நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசை நிகழ்ச்சி அனைவரையும் கவர்ந்தது. மேலும், திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களான நடிகர் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி மற்றும் 'பராசக்தி' படக்குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டது அனைவரது கவனத்தையும் ஈர்ப்பதாக அமைந்திருந்தது.