மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?

தூக்கிட்டு தான் மருத்துவர் உட்பட 4 பேரும் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனையின் முதற்கட்ட அறிக்கையில் தகவல். ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் திரட்ட முடியாததால் மருத்துவர் குடும்பத்தினர் சோக முடிவை தேடியதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

Mar 19, 2025 - 11:10
 0
மாதம் 90 லட்சம்.. குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்- போனில் மிரட்டியது யார்?
குடும்பத்தோடு தற்கொலை செய்த டாக்டர்

சென்னை திருமங்கலத்தில் வசித்து வந்த மருத்துவர் பாலமுருகன். அவரது மனைவி சுமதி. இரு மகன்கள் ஜஸ்வந்த் குமார் மற்றும் லிங்கேஷ்குமார் ஆகியோர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் திருமங்கலம் போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில் 6 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருப்பது தெரியவந்தது. 

போலீசார் நடத்திய விசாரணையில் ஒரே நாளில் ஒரு கோடி ரூபாயை திரட்ட முடியாமல் போனதால் பயத்தில் தற்கொலை செய்து கொண்டதாக விசாரணையில் கூறப்படுகிறது. தற்கொலை செய்து கொள்வதற்கு முந்தைய நாள் கடன் கொடுத்த நபர் ஒருவர் செல்போனில் மிரட்டி இருப்பதும், இல்லையென்றால் நேரில் வந்து அசிங்கப்படுத்துவேன் என மிரட்டியதும் விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு 90 லட்ச ரூபாய் கடன்: 

ஸ்கேன் சென்டர் மூலமாக கடன் வாங்க மருத்துவர் பாலமுருகன் திட்டமிட்டதும், சிபில் ஸ்கோர் இல்லாததால் கடன் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. டாக்டருடைய வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் வீட்டில் கிடைத்த ஆவணங்களை ஆய்வு செய்தபோது ஒரு மாதத்திற்கு மட்டும் இஎம்ஐ, பைனான்சியர்களுக்கான கடன் தொகை என மொத்தம் 90 லட்சம் ரூபாய் கடன் செலுத்தி வந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கோடிக்கணக்கில் கடன் வாங்கி தொழிலில் முதலீடு செய்தபோதிலும் எதிர்பார்த்த அளவுக்கு பிசினஸ் டெவலப்மெண்ட் இல்லை என்பதும், ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் என பைனான்சியர்களிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. 
ஆனால் யாருக்கும் தவணைத் தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்ததில்லை என போலீஸ் விசாரணைக்கு ஆஜரான பைனான்சியர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. நான்கு பேர் தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டதாக பிரேத பரிசோதனை முதற்கட்ட அறிக்கையில் தெரிய வந்திருப்பதாக போலீசார் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு மகன்களுக்கு மறுத்துப்போகும் மருந்தை கொடுத்துவிட்டு அதன் பின்பாக தற்கொலை செய்து கொண்டிருப்பதாக ஒரு தகவல் வெளியான நிலையில் அது குறித்து மருத்துவர்கள் உறுதி செய்யவில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

வழக்கின் தீவிரம் கருதி நான்கு பேரின் உடல் பாகங்களும் சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வுக்கூடத்திற்கு விஸ்ரா பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. நான்கு பேரின் உடலிலும் ஏதாவது விஷம், வேதிப்பொருட்கள் கலந்து இருக்கிறதா? என்பது விஸ்ரா பரிசோதனை முடிவில் தெரியவரும். அந்த பரிசோதனையின் முடிவிற்காக போலீசார் காத்திருக்கின்றனர் என்கிற தகவலும் வெளியாகியுள்ளது.

செல்போனில் மிரட்டியது யார்?

செல்போனில் மிரட்டிய நபர்கள் யார் என அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐந்து செல்போன்களை சைபர் ஆய்வகம் மூலமாக துப்புத் துலக்கி போலீசார் வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக கந்து வட்டி மற்றும் தற்கொலைக்கு தூண்டுதல் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரிக்க திட்டமிட்டு இருப்பதாகவும் போலீசார் தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். டாக்டரின் செல் போன் கால்டீட்டைல் ரெகார்ட்கள் அடிப்படையில் போலீசார் இதுவரை 30 பேர் வரை விசாரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Read more: கடன் தொல்லையால் மருத்துவர் எடுத்த முடிவு.. பரிதாபமாக பறிப்போன 4 உயிர்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow