தமிழ்நாடு

கடன் தொல்லையால் மருத்துவர் எடுத்த முடிவு.. பரிதாபமாக பறிப்போன 4 உயிர்

ஐந்து கோடி ரூபாய்க்கு மேல் கடன் ஏற்பட்டதால் மருத்துவர், அவரது மனைவி, இரண்டு மகன்கள் உட்பட நான்கு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடன் தொல்லையால் மருத்துவர் எடுத்த முடிவு.. பரிதாபமாக பறிப்போன 4 உயிர்
சுமதி- பாலமுருகன்

சென்னை அண்ணாநகர் மேற்கு 17-வது பிரதான சாலையில் உள்ள சிக்மா மகாதேவ் என்ற அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது தளத்தில் பாலமுருகன் என்ற மருத்துவர் வசித்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுமதி என்ற மனைவியும் ஜஸ்வந்த் குமார், லிங்கேஷ்குமார் என்ற இருமகன்களும் உள்ளனர். மேலும் மருத்துவர் பாலமுருகன் அண்ணாநகர் 13-வது பிரதான சாலையில் சொந்தமாக ஸ்கேன் சென்டர் நடத்தி வந்துள்ளார். 

இவரது மனைவி சுமதி சென்னை உயர்நீதிமன்றம் வழக்கறிஞராக பணியாற்றி தற்போது பணிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களது மூத்தமகன் ஜஸ்வந்த் குமார் பிளஸ் டூவில் தேர்ச்சி பெற்று தற்போது நீட் தேர்வுக்கு தயாராகி வருவதாகவும், இளையமகன் லிங்கேஷ்குமார் அண்ணாநகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை  மருத்துவர் பாலமுருகன் வீட்டிற்கு வேலை செய்ய வந்த பெண் நீண்ட நேரம் கதவை தட்டியும் கதவு திறக்காததால்  உடனே அவர்களை செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தால் சந்தேகமடைந்த பணிப்பெண் மருத்துவர் வீட்டு கார் ஓட்டுநர் மற்றும் அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி ஆகியோருக்கு தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இரு அறைகளில் கணவன் -மனைவி மற்றும் இரு மகன்கள் ஆகிய 4 பேரும் தூக்கில் பிணமாக இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவலின் பேரில் திருமங்கலம் போலீசார் விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட மருத்துவர் பாலமுருகன், அவரது மனைவி சுமதி, மகன்கள் ஜஸ்வந்த் மற்றும் லிங்கேஷ் ஆகிய 4 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கேஎம்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில் மருத்துவர் பாலமுருகன் நடத்தி வரும் ஸ்கேன் சென்டர் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழிலை விரிவுபடுத்த எண்ணி சுமார் 5 கோடி ரூபாய்க்கு மேல் கடன் வாங்கி நஷ்டம் அடைந்துள்ளதாகவும் மன உளைச்சலுக்கு ஆளான அவர் தனது குடும்பத்துடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது.

இருப்பினும் போலீசார் ஓரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கடன் சுமையால் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்தும், தற்கொலைக்கு முன்பு ஏதேனும் கடிதமோ அல்லது செல்போனில் வீடியோ பதிவு செய்து வைத்துள்ளார்களா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை மருத்துவர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.