இந்தியா

14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!

ஆந்திர மாநிலம் அனகாபள்ளியில் உள்ள மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள வெடி விபத்தில் 7 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

14 பேரை காவு வாங்கிய வெடி விபத்து... ஆந்திராவில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களால் மக்கள் அச்சம்!
ஆந்திராவில் வெடி விபத்து

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி அருகே உள்ள அச்சுதபுரம் என்ற இடத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் (Special Economic Zone (SEZ)) அமைந்துள்ளது. இங்கு மருந்து தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று (ஆகஸ்ட் 21) மதியம் 2 மணியளவில் உணவு இடைவெளிக்காக தொழிலாளர்கள் அனைவரும் உணவருந்த சென்றுள்ளனர். அப்போது திடீரேன ரியாக்டர் ஒன்று வெடித்து விபத்துக்குள்ளானது. சம்பவம் குறித்து அறிந்த அனகாபள்ளி காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக்குழுவினர் உடனே அந்த இடத்திற்கு சென்று தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த விபத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ரியாக்டர் வெடித்துத் தீப்பிடித்ததற்கான காரணம் குறித்து அனகாபள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பாக அனகாபள்ளி கூடுதல் போலீஸ் எஸ்.பி. தேவ பிரசாத் கூறுகையில், "காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் நிலைமை சீராக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த அம்மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணன், “ரியாக்டர் மூலம் இந்த வெடி விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இல்லை. மின்சாரக் கோளாறுகள் மூலம் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம். இதுகுறித்து தீவிரமாக விசாரனை நடத்தி உண்மையை கண்டறிவோம். வெடி விபத்து ஏற்பட்டுள்ளதால் இப்பகுதியே புகை மண்டலமாக உள்ளது. எனவே இன்னும் தொழிலாளர்கள் யாரேனும் உள்ளே சிக்கியுள்ளார்களா எனத் தெரியவில்லை. மீட்புப் பணிகளில் மீட்புக் குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் ” என பேட்டி அளித்துள்ளார். 

இச்சம்பவம் தொடர்பாகப் பேசிய ஆந்திராவின் தொழிலாளர், தொழிற்சாலைகள், கொதிகலன்கள் மற்றும் காப்பீட்டு மருத்துவ சேவைகள் அமைச்சர் வாசம்செட்டி சுபாஷ், “காயமடைந்தவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மீட்புக்குழுவினர் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். இதுதொடர்பான தகவல்களை உடனுக்குடன் நிச்சயமாக தெரிவிப்போம்” என கூறியுள்ளார். 

இது முதல்முறை அல்ல: 

அண்மையில் இதே போல் ஆந்திராவில் ஸ்ரீகாகுளம், பைடிபீமாவரத்தில் சரக்கா ரசாயன தொழிற்சாலை ஒன்று இயங்கி வந்தது. அங்கு மின்உலையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் தொழிற்சாலை வளாகத்தில் இருந்த ஏராளமான வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சேதமாகின. ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. 

மேலும் படிக்க: “நான் அரசியலை விட்டு விலகமாட்டேன்... விரைவில் புதிய கட்சி..” சம்பாய் சோரன் அதிரடி!

இதுபோன்று தொடர் தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால் ஆந்திரா மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.