‘சிரிப்பதற்கு மைதானத்திற்கு வரவில்லை’ - கம்பீரின் சர்ச்சைகளும், வெற்றிகளும்

உலகக்கோப்பை சாம்பியன், ஐபிஎல் வின்னர், பாராளுமன்ற உறுப்பினர், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் என்று பன்முகத் தன்மை கொண்ட இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பிறந்தநாள் இன்று [அக்டோபர் 13].

Oct 15, 2024 - 02:58
Oct 18, 2024 - 01:03
 0
‘சிரிப்பதற்கு மைதானத்திற்கு வரவில்லை’ - கம்பீரின் சர்ச்சைகளும், வெற்றிகளும்
இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீருக்கு பிறந்தநாள் இன்று

1981ஆம் ஆண்டு இதே நாளில் [அக்டோபர் 13] இந்திய கிரிக்கெட் சகாப்தத்தில் முக்கிய இடம்பெறவிருந்த அந்த புயல் பூமியை கடந்தது. பெற்றோர்களின் அரவணைப்பில் இருந்து விடுபட்டு, கம்பீர் பிறந்த 18 நாட்களுக்குப் பிறகு, அவரது தாய்வழி தாத்தா பாட்டிகளால் தத்தெடுக்கப்பட்டு அவர்களுடனே தனது இளமை பிராயத்தை களித்தார்.

10 வயது முதல் கிரிக்கெட் மட்டையை பிடிக்கத் தொடங்கிய அந்த சிறுவன், தற்போது வரை விடாமல் இறுகப் பற்றிக்கொண்டுள்ளார். டெல்லி அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடிய கவுதம் கம்பீர், 2003ஆம் ஆண்டு வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச களமிறங்கிய கம்பீர், 11 ரன்களில் வெளியேறினார். அதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் மற்றும் 2ஆவது இன்னிங்ஸில் முறையே 3, 1 ரன்கள் மட்டுமே எடுத்த சோகம் நிகழ்ந்து.

தனது அறிமுக டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் பெரியளவில் சோபிக்கவில்லை என்றாலும் இரண்டிலும் இந்திய அணி வெற்றிபெற்றது. ஆனாலும், அடுத்த 10 ஆண்டுகளில் தனது ராஜாங்கத்தை நிகழ்த்திவிட்டே சென்றார் எனலாம். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து 11 டெஸ்ட் போட்டிகளில் அரைசதம் விளாசி சாதனை படைத்திருந்தார் கம்பீர். மேலும், தொடர்ச்சியாக 5 டெஸ்ட் போட்டிகளில் சதம் விளாசிய ஒரே இந்திய வீரரும் இவர்தான்.

ஜெண்டில்மேன் விளையாட்டு என்று சொல்லக்கூடிய கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணி அமைதியாக ஆடிக்கொண்டிருந்தது. எப்போது வரை என்றால், கொல்கத்தா இளவரசர் என்றும் தாதா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சவுரவ் கங்குலி கேப்டனாக பொறுப்பேற்கும் வரையிலும் தான்.

இதையும் படியுங்கள்: ‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு

சவுரவ் கங்குலி பொறுப்பேற்றதும், இந்திய அணியின் முகம் மாறிப்போனது. எந்த ஆஸ்திரேலியா அணி, தனது கேளிகளாலும், கிண்டல்களாலும் எதிரணியை வீழ்த்தியதோ, அந்த அணியை அதன் சொந்த மண்ணிலேயே முதன்முறையாக வீழ்த்தியது கங்குலி தலைமையிலான இந்திய அணி. கங்குலி மட்டுமல்ல அவரின் கீழ் விளையாடிய அனைத்து இளம் வீரர்களும் ஆக்ரோஷத்திற்கு பெயர் பெற்றவர்கள் தான். வீரேந்தர் சேவாக், கவுதம் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் என வரிசைக்கட்டி சொல்லலாம்.

2007ஆம் ஆண்டு காலகட்டத்தில் டி20 போட்டிகள் அறிமுகமான பிறகு முதல் டி20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றது. இந்த தொடரில்தான் கவுதம் கம்பீரும் முதல் டி20 போட்டியை விளையாடினார். ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. அடுத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் டக் அவுட் ஆனார்.

ஆனால், அதன்பிறகு, பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில், 54 பந்துகளில் [8 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 75 ரன்கள் அடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கிய காரணியாக திகழ்ந்தார். இது இந்திய அணியின் மொத்த ரன்களில் [157 ரன்கள்] ஏறக்குறைய பாதி ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இந்திய அணி 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பையை வென்றபோதும், முக்கிய தூணாக விளங்கியவர் கவுதம் கம்பீர் தான். அந்த உலகக்கோப்பை தொடரில், இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்தவர்களில் கவுதம் கம்பீர் தான் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தைப் பிடித்திருந்தார். அந்த போட்டியில் சகதியுடன் இருந்த டி-ஷர்டை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாக கம்பீர் தெரிவித்திருந்ததார்.

2011இல் இந்திய அணி உலகக்கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி வென்றது. அப்போது, தோனியை இந்தியா முழுவதும் கொண்டாடிய நிலையில், அவர் மட்டுமே காரணம் அல்ல என்று பளிச் என்று சொன்னவர் கவுதம் கம்பீர். அதற்கு அவர் சொன்ன காரணமும் முக்கியமானது. “பெரிய பங்களிப்பை கொண்டாடிவிட்டு பல சமயங்களில் அணிக்கு உபயோகமான சிறிய பங்களிப்பை கொண்டாட மறந்துவிடுவோம்” என தெரிவித்திருந்தார்.

கொல்கத்தா அணியின் கேப்டனாக கம்பீர் இருந்தபோது, பெங்களுரூ அணி கேப்டனாக விராட் கோலியுடன் மோதலில் ஈடுபட்டது சர்ச்சையானது. அப்போது பல போட்டிகளில் இவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி இருவரும் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு மோதும் அளவுக்கும் சென்றிருக்கின்றனர்.

இதுமட்டுமின்றி கம்பீர் அணி வீரராக இல்லாமல், லக்னோ அணியின் பயிற்சியாளராக இருந்த போது (2023) கூட இருவருக்குள் வெடித்த கலவரத்தை ஐபிஎல் ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். இவ்வளவு சர்ச்சைக்கு மத்தியிலும், கொல்கத்தா அணிக்கு இரண்டு சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளதும், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் [IPL 2014] கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக செயல்பட்டு கோப்பையையும் வென்று கொடுத்ததும் முக்கியமானது.

கம்பீரை பொறுத்தவரையில் அவருக்கு வெற்றி முக்கியமானது. தோல்வியை அவ்வளவாக விரும்பாதவர். இதன் காரணமாக எப்போதும் களத்தில் இறுக்கமாக இருந்து வருகிறார். இது குறித்து ஒருமுறை அவரிடம் கேட்கப்பட்டபோது, “ரசிகர்கள் எனது சிரிப்பை பார்க்க மைதானத்திற்கு வருவதில்லை. அவர்கள் தங்களுடைய அணி வெற்றி பெறுவதைப் பார்ப்பதற்காகவே வருகின்றனர். அது மாதிரியான தொழிலில்தான் நாங்கள் இருக்கிறோம். எனது சிரிப்பால் அணிக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது.

மேலும் படிக்க: வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

நான் பாலிவுட் நடிகர் கிடையாது. ஓய்வறைக்கு செல்லும்போது வெற்றியாளராக திரும்புவதே என்னுடைய வேலை. வெற்றிபெற்ற ஓய்வறையே மகிழ்ச்சி நிறைந்த அறையாக இருக்கும். எனக்காக போராடுவதற்கும், அணியினருக்காக போராடுவதற்கும், எதிரணியை வீழ்த்துவதற்கும், விளையாட்டின் விதிமுறைக்குள் முடிந்த அனைத்தையும் செய்வதற்கு எனக்கு எல்லா உரிமையும் உண்டு. அதற்காக சிலர் அவர் மிகவும் கடினமானவர், குறிப்பிட்ட வழியில் விளையாடுகிறார் என்று சொல்வார்கள். ஆம்.. நான் அப்படித்தான் செய்கிறேன்” என்று பதிலளித்தார்.

விளையாட்டில் மட்டுமல்லாமல் அரசியலில் வெற்றியை பார்த்தவர் கவுதம் கம்பீர். ஆனால், அதனை தனது தலையில் வைத்துக் கொண்டாடாமல், கடந்து சென்றவர்தன் அவர். கடந்த 2019ஆம் ஆண்டு பாஜக எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுதம் கம்பீர் இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இணைவதற்காகவே, அரசியலில் இருந்து விலகியதாக கூறப்பட்டது. அதே போல், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக செயல்பட்ட கவுதம் கம்பீர், கோப்பையையும் வென்று கொடுத்தார். முன்னதாக, கொல்கத்தா அணிக்கு 2 முறை கேப்டனாக செயல்பட்டு கோப்பையை வென்று கொடுத்திருந்தார்.

தற்போது, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள கவுதம் கம்பீர் தொடர்ந்து தனது வெற்றி முகத்தை, அதாவது இறுக்கமான முகத்திற்கு பின்னாள் ஒளிந்திருக்கும் மெல்லிய புன்னகையோடான முகத்தை இன்னும் பிரகாசிக்க செய்வார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.. பிறந்தநாள் வாழ்த்துக்கள் கவுதம் கம்பீர்...

- லெனின் அகத்தியநாடன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow