‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு

வடகிழக்கு பருவமழை காரணமாக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து சென்னையில் காய்கறி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Oct 15, 2024 - 15:02
Oct 15, 2024 - 15:45
 0
‘தக் லைஃப்’ செய்த தக்காளி.. இரவே அள்ளிச்சென்ற பொதுமக்கள்.. சென்னையில் காய்கறி தட்டுப்பாடு
காய்கறி தட்டுப்பாடு - பொதுமக்கள் அவதி

சென்னையில் இன்று கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், நாளை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 9 மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்து மத்திய வங்க கடலில் நிலை கொண்டுள்ளது...

மேலும் படிக்க: வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ்.. தொழிலாளியை அடித்து துவைத்த திமுக நிர்வாகி

இது தொடர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து புதுச்சேரி வடதமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடற்கரை ஓரம் அடுத்த இரண்டு தினங்களில் நிலவக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதற்கடுத்த 2 நாட்களில் வட தமிழகம், புதுச்சேரி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளை நோக்கி நகரும் எனவும் கூறியுள்ளது. மேலும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், பெரம்பலூர், தஞ்சை மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் எனவும், நாளை கன முதல் மிக கனமழை மற்றும் ஓரிரு இடங்களில் அதி கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : ‘சிரிப்பதற்கு மைதானத்திற்கு வரவில்லை’ - கம்பீரின் சர்ச்சைகளும், வெற்றிகளும்

இந்நிலையில், நேற்று மாலை முதலே சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. இதனால், பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கடைகளிலும், சூப்பர் மார்க்கெட்டிலும் குவிந்தனர். காய்கறி கடைகளில் மாலைக்கு மேல் கூட்டம் அலைமோதியது. சில பகுதிகளில் மார்க்கெட் பகுதிகளில் கடைகள் பூட்டப்பட்டிருந்தன.

இதனிடையே சென்னையில் பல்வேறு பகுதிகளில் காய்கறி தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். பல்வேறு இடங்களில் கடைகள் காய்கறி இன்றி வெரிச்சோடி காணப்பட்டு வருகிறது. பெரும்பாலான காய்கறி கடைகள் மூடி கிடக்கும் சூழலே நிலவுகிறது. கடைகள் இல்லாமல் காலியாக கிடப்பதால், காய்கறிகள் மற்றும் பொருட்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் பெருத்த சிரமம் அடைந்துள்ளனர்.

மேலும், கனமழையின் காரணமாக காய்கறியின் விலை உச்சத்தை எட்டியுள்ளது என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். தக்காளி 25 கிலோ எடை கொண்ட பெட்டி ரூபாய் 2500 முதல் 3000 வரை விற்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். 

கோயம்பேடு மொத்த விற்பனை சந்தையில் தக்காளி கிலோ120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், சில்லறை விற்பனை கடைகளில் தக்காளி கிலோ 150 ரூபாய் வரை விற்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதேபோல், சின்ன வெங்காயம் ரூ.80க்கும், பெரிய வெங்காயம் ரூ.60க்கும் விற்பனையானது.

சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு நாளைக்கு ரெட் அலர் விடுக்கப்பட்டுள்ளதால், இன்னும் நிலைமை மோசமாக இருக்கும் என்று பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் உள்ளதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow