உலகம்

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனியார் செய்தி சேனலுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீதுள்ள தனது நம்பிக்கையை வெளிப்படுத்தியிருப்பது உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் போர் ஒரு முடிவுக்கு வராத நிலையில், டிரம்பின் இந்தக் கருத்து பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் கிளப்பியுள்ளது.

டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
டிரம்பின் இரட்டை நிலைப்பாடு.. உக்ரைன் போர் முடிவுக்கு வருமா?
"நான் யாரையும் நம்புவதில்லை" என்று திட்டவட்டமாகக் கூறிய டிரம்ப், அதே சமயம் புதின் தனக்கு ஏமாற்றம் அளித்தாலும், அவர் மீதுள்ள நம்பிக்கையை இன்னும் இழக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இது டிரம்பின் இரட்டை நிலைப்பாட்டைக் காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

யுக்ரேனுக்கு ஆயுத உதவி வழங்குவது மற்றும் ரஷ்யா மீது கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரிக்கும் டிரம்ப், அதே நேரத்தில் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தயாராக இருப்பதாகக் கூறுவது வியப்பளிக்கிறது. போரை முடிவுக்குக் கொண்டு வர நான்கு முறை ஒப்பந்தம் ஏற்பட்டும், புதின் பின்வாங்கியது தனக்கு ஏமாற்றம் அளித்ததாக டிரம்ப் கூறியுள்ளார்.

ஒரு காலத்தில் நேட்டோவை விமர்சித்த டிரம்ப், தற்போது நேட்டோவின் பொதுவான பாதுகாப்புக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். பென்சில்வேனியாவில் நடந்த தாக்குதல் சம்பவம் தனக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்ததாகவும், அதைப் பற்றி அதிகம் சிந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவை சந்தித்த பிறகு பேசிய டிரம்ப், புதின் உடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளார். "போரையும், ரத்தம் சிந்துவதையும் நிறுத்த நாங்கள் அதைச் செய்து வருகிறோம்" என்று டிரம்ப் உறுதியளித்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி போரை முடிவுக்குக் கொண்டு வர டிரம்ப் என்ன மாதிரியான அணுகுமுறையைக் கையாளப் போகிறார் என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

டிரம்ப் மேலும் கூறுகையில், உலகத் தலைவர்கள் தன்னை மதிப்பதாகவும், தனது முடிவெடுக்கும் திறனைப் பாராட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். பிரிட்டனுடனான உறவுகுறித்து பேசிய அவர், பிரெக்ஸிட் பிரச்சினையில் பிரிட்டன் சோர்வாக இருந்தாலும், தற்போது சரியாகி வருவதாகக் கருதுவதாகக் கூறினார்.

மேலும், இந்த ஆண்டு செப்டம்பரில் பிரிட்டனுக்கு மேற்கொள்ளவிருக்கும் அரசு முறைப் பயணத்தை ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். மன்னர் சார்லஸுக்கு மரியாதை செலுத்தவும், அவருடன் நல்லுறவை பேணவும் விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுப்பதில் தனது நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக டிரம்ப் பெருமிதம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் வசிப்பவர்களை நாடு கடத்தும் திட்டத்தைத் தீவிரமாகச் செயல்படுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவை காப்பாற்றுவதே தனது முக்கிய குறிக்கோள் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். "அமெரிக்கா இப்போது மிகச் சிறந்த நாடாக இருப்பதாக நினைக்கிறேன். ஓர் ஆண்டுக்கு முன்பு அது ஓர் இறந்த நாடாக இருந்தது" என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது பேட்டியில் பல்வேறு விஷயங்களைக் குறித்து பேசியிருந்தாலும், உக்ரைன் போர் மற்றும் புதின் மீதான அவரது நம்பிக்கை ஆகியவை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. டிரம்ப் தனது செல்வாக்கை பயன்படுத்தி உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.