உலகம்

'நியூயார்க் டைம்ஸ்' மீது டிரம்ப் அவதூறு வழக்கு: 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு மனு!

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார்.

'நியூயார்க் டைம்ஸ்' மீது டிரம்ப் அவதூறு வழக்கு: 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு கேட்டு மனு!
Trump files defamation lawsuit against 'New York Times
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புகழ்பெற்ற 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகைக்கு எதிராக 15 பில்லியன் டாலர் (ரூ.1.32 லட்சம் கோடி) நஷ்டஈடு கேட்டு அவதூறு வழக்கு தொடுத்துள்ளார். பல ஆண்டுகளாகப் பத்திரிகை தன்னை அவமதித்து வருவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

டிரம்பின் குற்றச்சாட்டுகள்

இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில், "நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, பல ஆண்டுகளாகத் தொடர்ந்து என்னைப்பற்றியும், எனது அரசியல் குறித்தும் தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிட்டு வருகிறது. குறிப்பாக, 2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின்போது வெளியான கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள், தனக்கு அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் திட்டமிட்டு வெளியிடப்பட்டவை" என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் அவர், நியூயார்க் டைம்ஸ், "தீவிர இடதுசாரி ஜனநாயகக் கட்சியின் ஒரு ஊதுகுழலாக" மாறிவிட்டது என்றும், அரசியல் உள்நோக்கத்துடன் இந்தச் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

நஷ்டஈடு கோரிக்கை

நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் அவதூறான செய்திகளால் தனது நற்பெயருக்குப் பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 15 பில்லியன் டாலர் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்றும் புளோரிடா நீதிமன்றத்தில் ட்ரம்ப் மனு தாக்கல் செய்துள்ளார்.

நியூயார்க் டைம்ஸ் பதில்

டிரம்பின் இந்த வழக்கு குறித்து நியூயார்க் டைம்ஸ் நிறுவனம், "இந்த வழக்கில் எந்தச் சட்டப்படியான தகுதியும் இல்லை. இது சுயாதீனமான பத்திரிகைத் துறைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முயற்சி" என்று தெரிவித்துள்ளது. மேலும், "பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து போராடுவோம். எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் உண்மைகளை வெளிப்படுத்துவோம்" என்றும் கூறியுள்ளது.

முன்னதாக, 2021-ல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த இதேபோன்ற ஒரு வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து, ட்ரம்பிற்கு அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.