உலகம்

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்! Type 5 Diabetes என்றால் என்ன?

உலகில் பல கோடி மக்கள் நீரிழிவு நோயால் அவதியுற்று வருகின்றனர். நாளுக்கு நாள் இந்த நோயால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில், தற்போது புது வகையான நீரிழிவு நோய் கண்டறியப்பட்டுள்ளது. அது என்ன? அதன் வீரியம் என்ன? யாருக்கெல்லாம் அந்த நோய் ஏற்படும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்...

சர்க்கரை நோயின் புதிய அவதாரம்.. அச்சம் கொள்ளும் உலக நாடுகள்! Type 5 Diabetes என்றால் என்ன?
ஒருவர் ஆடிக்கொண்டிருக்கும்போது திடீரென மயங்க விழுந்து இறப்பது, பேசிக்கொண்டிருந்த போதே மயங்கி விழுந்து இறப்பது என சமீபகாலமாக இணையத்தில் பல வீடியோக்களை நாம் பார்த்துவருகிறோம். இதனால் heart attack, cardiac arrest மட்டும் தான் தற்போது மனிதர்களுக்கு வரும் பெரும் நோயாக பார்க்கப்படுகிறது. ஆனால் சைலண்ட் கில்லரான நீரிழிவு நோய்யை பற்றி நம்மில் பலர் கண்டுக்கொள்வதே இல்லை.

ஆனால், அந்த நீரிழிவு நோயோ பல பரிணாமங்களை எடுத்துக்கொண்டே போகிறது. அதாவது பேங்காக்கை சேர்ந்த ஒரு ஆராய்ச்சியாளர் டைப் 5 நீரிழிவு நோய் என்ற ஒரு புதிய பரிணாமத்தை கண்டுபிடித்துள்ளார். இதை பற்றி புரிந்துக்கொள்ள முதலில் நீரிழிவு நோய் பற்றி நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதுவரை நீரிழிவு நோய் டைப் 1, டைப் 2 என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. எப்போது நமது உடல் போதிய இன்சுலினை சுரக்கவில்லையோ அது டைப் 1 நீரிழிவு நோய் எனக் கருதப்படுகிறது. இதுவே, நமது உடல் இன்சுலினை சுரந்து, அது சரியாக பயன்படுத்தப்படவில்லை என்றால் அது டைப் 2வாம். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், சரியான உணவு பழக்கவழக்கம் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ளாவிட்டால், நாளடைவில் அவர்களுக்கு பார்வையிழப்பு, சிறுநீரக பாதிப்பு, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பெரும் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு.

உயிர்கொள்ளியான இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1990ம் ஆண்டில் 200 மில்லியனாக இருந்துள்ளது. இந்த எண்ணிகையே அதிர்ச்சியளிக்கும் விதமாக இருக்கையில், அடுத்த 32 ஆண்டுகளில், அதாவது 2022ம் ஆண்டில் 4 மடங்காக உயர்ந்து 830 மில்லியனை தொட்டுள்ளது. இதில் 4ல் ஒரு பங்கிற்கு மேல். அதாவது சுமார் 21.2 கோடி பேர் இந்தியர்கள்.

இப்படி நீரிழிவு நோயின் கோரப் பிடியில் சிக்கி கோடிக்கணக்கானோர் அவதிப்பட்டு வரும் இந்த வேலையில் தான், டைப் 5 டயபிடீஸ் என்ற புதிய பரிணாமத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, டைப் ஒன்று மற்றும் இரண்டில் இருந்து இந்த டைப் 5 டயாபிடீஸ் வேறுபடுகிறதாம். அதாவது, ஊடச்சந்து குறைபாடுள்ள, உடல் எடை 18 கிலோவுக்கும் குறைவாக உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த டைப் 5 நீரிழிவு நோய் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வகை நோய் 2025ல் புதிதாக தோன்றியது அல்ல. ஏற்கனவே 1955லேயே முதன்முதலில் ஜமாய்காவில் இந்த வகை நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்பட்டு ’டைப் ஜே’ எனப் பெயரிடப்பட்டது. இதன் பிறகு இந்த வகை நோய் 1985ல் நோய்களின் பட்டியலில் இணைக்கப்பட்டது. ஆனால் 1999ம் ஆண்டிலேயே இதற்கான மருத்துவ ஆதாரங்கள் இல்லை எனக்கூறி, நோய்களின் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது.




இந்நிலையில், தாய்லாந்தின் பாங்காக்கில் நடைபெற்ற சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் உலக நீரிழிவு மாநாடு டைப் 5 டயபிடீசை, நோய்களின் பட்டியலில் இணைக்கவேண்டும் எனவும், இதற்கான விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்தவில்லை என்றால் நிலைமை கைமீறிச் சென்றுவிடும் எனவும் விவாதிகப்பட்டது. இதனால் இந்த நோயின் வீரியத்தை ஆராய குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது.

உலகமே பீதியில் உள்ள இந்த டைப் 5 நீரிழிவு நோய் பற்றி மருத்துவர். பூபதி ஜானிடம் கேட்டறிந்தோம். அவர், “சத்துள்ள உணவு சாப்பிடாதவர்களுக்கு டைப் 5 சர்க்கரை நோய் வரலாம். இந்த நோய்கான மருத்துவம் என்ன என்ற வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் வரவில்லை, என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சர்க்கரை நோய் போன்ற கொடிய நோய்களில் சிக்காமல் இருக்க சரியான உணவு பழக்கமும், உடற்பயிற்சியும், மருத்துவ பரிசோதனைகளும் அவசியம் என மருத்துவர் பூபதி ஜான் தெரிவித்துள்ளார். இந்நிலையில், மருத்துவர் கூறியதை கேட்டால் ’வரும் முன் காப்போம்’ என்ற மனநிலையே சர்க்கரை நோய்க்கு சிறந்த தீர்வு எனப் புரிந்துக்கொள்ள முடிந்தது..

- ஜனனி சசிகலா✒️