உலகம்

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!

சீனாவில் நடப்பாண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு 3 வயதாகும் வரை, ஆண்டுதோறும் ரூ.44,000-ஐ மானியமாக வழங்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

2025-ல் பிறந்த குழந்தைகளுக்கு மானியம்.. சீன அரசின் புதிய திட்டம்!
Chinese government launches new plan to increase birth rate
உலகில் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்து, தற்போது இந்தியாவுக்குப் பின்னால் இரண்டாம் இடத்திற்குச் சரிந்துள்ள சீனா, தனது குறைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நடப்பு ஆண்டு ஜனவரி 1 முதல் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும், 3 வயது வரை, ஆண்டுக்கு 3,600 யுவான் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000) மானியம் வழங்க உள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு குழந்தைக்கு மொத்தமாக ரூ.1.30 லட்சம் வரை மானியம் கிடைக்கும்.

பல ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட மக்கள் தொகைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் விளைவாக, தற்போது சீனாவில் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. 2016-ல் 9.5 மில்லியன் ஆக இருந்த மொத்தப் பிறப்புகள், 2024-ல் பாதியாகக் குறைந்துவிட்டன. குழந்தை பராமரிப்பு மற்றும் கல்விக்கான அதிக செலவு, வேலையின்மை ஆகியவை இளைஞர்கள் குழந்தைகள் பெற்றுக்கொள்வதைத் தவிர்ப்பதற்கான முக்கிய காரணங்கள் என மக்கள்தொகை ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

மக்கள் தொகை சரிவால் கவலை அடைந்துள்ள சீனா, பிறப்பு விகிதத்தை உயர்த்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் ஏற்கனவே குழந்தை பராமரிப்பு மானியங்களை வழங்கத் தொடங்கியுள்ளன. மார்ச் மாதம், உள் மங்கோலியாவின் தலைநகரம், மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தம்பதிகளுக்கு ஒவ்வொரு புதிய குழந்தைக்கும் 100,000 யுவான் (ரூ.12,09,460) வரை வழங்கத் தொடங்கியது.

கருவுறுதலை அதிகரிக்க சீனா திருமண விடுமுறையை 5 நாட்களில் இருந்து 25 நாட்களாகவும், தற்போதுள்ள 60 நாள் மகப்பேறு விடுமுறையை 150 நாட்களாகவும் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.