இந்தியா

"பஹல்காமில் ஏன் பாதுகாப்புப் படையினர் இல்லை" – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்


காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் பொதுச்செயலாளரும், வயநாடு எம்.பியுமான பிரியங்கா காந்தி, “ பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு வழிவகுத்த உளவுத்துறை தோல்வி மற்றும் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தை முழுமையாகப் பாதுகாப்பின்றி விட்டுச் சென்றது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.

அரசை நம்பி சென்றனர்

பாதுகாப்பு அமைச்சர் ஒரு மணி நேரம் பேசினார். மற்ற ஆளும் கட்சி எம்.பி.க்களும் பேசினார்கள். ஆபரேஷன் சிந்தூர் முதல் பயங்கரவாதம், தேசிய பாதுகாப்பு, வரலாறு வரை அனைத்தும் பேசப்பட்டன. ஆனால் ஒரு விஷயம் மட்டும் தவிர்க்கப்பட்டது. ஏப்ரல் 22, 2025 அன்று, 26 பேர் அவர்களது குடும்பத்தினர் முன்னிலையில் கொல்லப்பட்டபோது, இந்தத் தாக்குதல் எப்படி நடந்தது, ஏன் நடந்தது?" என்று கேள்வி எழுப்பினார்.

காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டதாக அரசாங்கம் கூறியதை நம்பி மக்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வருகை தந்துள்ளனர். அரசாங்கம் சொன்னதை நம்பிய சுபம் திவேதியும், அவரது குடும்பத்தினரும் காஷ்மீருக்குச் செல்ல முடிவு செய்தனர். அதற்கு 6 மாதங்களுக்கு முன்பு அவர் திருமணம் செய்து கொண்டார். ஏப்ரல் 22 அன்று, பைசரன் பள்ளத்தாக்கில் வானிலை நன்றாக இருந்தது. பல சுற்றுலாப் பயணிகள் அங்கு வந்தனர். குழந்தைகள் ஒரு விளையாடிக்கொண்டிருந்தனர், யாரோ ஒருவர் ஜிப்லைனில் இருந்தார். ஒருவர் தேநீர் அருந்திக் கொண்டிருந்தார், ஒருவர் இயற்கை அழகை ரசித்துக் கொண்டிருந்தார். பின்னர் காட்டில் இருந்து நான்கு பயங்கரவாதிகள் வந்து ஷுபமை அவரது மனைவியின் முன் கொன்றனர். அடுத்த ஒரு மணி நேரத்திற்கு, அவர்கள் 26 பேரை கொன்றுள்ளனர்.

ஒரு பாதுகாப்புக்காவலர் கூட இல்லை

அங்கு இந்த தாக்குதல் நடந்த போது, ஒரு பாதுகாப்புக்காவலர் கூட இல்லை. அரசாங்கம் அவர்களை அங்கே கைவிட்டுவிட்டன என பேசினார். தொடர்ந்து பேசிய பிரியங்கா காந்தி, ஏன் அங்கு ஒரு ராணுவ வீரர் கூட நிறுத்தப்படவில்லை? தினமும் 1,000-1,500 பேர் அங்கு செல்வது அரசாங்கத்திற்குத் தெரியாதா? பாதுகாப்பு இல்லை. .முதலுதவி இல்லை. இந்த மக்கள் இந்த அரசை நம்பி தானே அங்கு சென்றனர்.ஆனால் அவர்களுக்க அங்கு இந்த கொடூரம் நேர்ந்துள்ளது.

பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இந்தியர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பல்லவா என்று என்று பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பினார். மேலும், தாக்குதலுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, உள்துறை அமைச்சர் காஷ்மீருக்குச் சென்று பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டுவிட்டதாகக் கூறினார். தாக்குதல் நடந்த மூன்று மாதங்களுக்குப் பிறகு, பைசரன் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட பாதுகாப்பு குறைபாட்டிற்கு தான் பொறுப்பேற்பதாக லெப்டினன்ட் கவர்னர் சாதாரணமாகக் கூறுகிறார். விஷயம் அங்கேயே முடிகிறது. யாரும் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை.

பாதுகாப்பு அமைப்பின் தோல்வி இல்லையா?

பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பயங்கரவாத அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட், 2019ல் உருவாக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்டது என்று அவர் கூறினார். எனவே ஆளும் கட்சித் தலைவர்கள் இதையெல்லாம் அறிந்திருந்ததாகக் கூறுகிறார்கள், ஆனால் இந்த கொடூரமான தாக்குதலின் திட்டமிடல் குறித்து எந்த உளவு அமைப்புக்கும் தெரியாது. இது நமது பாதுகாப்பு அமைப்பின் தோல்வி இல்லையா? இது ஒரு பெரிய தோல்வி என்று கூறினார்.

ஆளும் கட்சித் தலைவர்கள் மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தாக்குதல்களைப் பற்றிப் பேசி, மன்மோகன் சிங் அரசு எதுவும் செய்யவில்லை என்று கூறினர். ஒருவரைத் தவிர மற்ற அனைத்து பயங்கரவாதிகளும் அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர் என்பதை அவர்கள் அறிந்திருக்க வேண்டும். மீதமுள்ள பயங்கரவாதி 2012ல் தூக்கிலிடப்பட்டார். மகாராஷ்டிரா முதல்வர் ராஜினாமா செய்தார். நாட்டின் உள்துறை அமைச்சர் அப்போது ராஜினாமா செய்தார்.

உள்துறை அமைச்சர் பதிலளிக்கவில்லை

மேலும், தற்போதைய பாஜக ஆட்சியில் டெல்லி கலவரங்களைக் கண்டதாகவும், மணிப்பூர் தீப்பிடித்து எரிந்ததாகவும், பஹல்காம் தாக்குதல் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கண்காணிப்பில் நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார். ஏப்ரல் 22 அன்று என்ன நடந்தது என்பதை நாடு அறியும். நம் நாடு தாக்கப்பட்டால், இந்த அவையில் உள்ள அனைவரும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களும், உங்களுக்கு ஆதரவளிப்பார்கள். மேலும், துணிச்சலுடன் போராடியதற்காக எங்கள் படைகளைப் பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். பிரதமர் ஆபரேஷன் சிந்தூரின் பெருமையை ஏற்க விரும்புகிறார். ஆனால் தலைமை என்பது வெறும் பெருமையைப் பெறுவது மட்டுமல்ல, பொறுப்பையும் ஏற்க வேண்டும்" என்று அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசாங்கத்திற்கு முன்பாக அறிவித்ததைக் குறிப்பிட்ட பிரியங்கா காந்தி, இது பிரதமரின் பொறுப்பற்ற தன்மையின் மிகப்பெரிய அறிகுறி என்றார். எதிரிகள் நம் தயவில் இருக்கும்போது போர் நிறுத்தம் ஏன் நடந்தது என்று உள்துறை அமைச்சர் பதிலளிக்கவில்லை. என் தாயின் கண்ணீரைப் பற்றி அவர் பேசினார். பயங்கரவாதச் செயலில் எனது தந்தை தியாகியானபோது, என் அம்மா அழுதார். இன்று நான் இந்த 26 பேருக்காக நின்று பேசுகிறேன். ஏனென்றால் அந்த வலியை உணர்கிறேன் என்று அவர் கூறினார்.

யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை

நாடு, பழிவாங்கலை மட்டுமல்ல, அனைவரின் பாதுகாப்பிற்கும் அர்ப்பணிப்பை விரும்புகிறது. அது படைகளின் வீரத்தை மட்டுமல்ல, அரசாங்கத்தின் நேர்மையையும் விரும்புகிறது.
இந்த அரசாங்கம் எப்போதும் கேள்விகளைத் தவிர்க்க முயற்சிக்கிறது.அதன் அரசியல் கோழைத்தனம் ஈடு இணையற்றது.அவர்களுக்கு மக்களிடம் எந்தப் பொறுப்பும் இல்லை. எல்லாமே அவர்களுக்கு மக்கள் தொடர்பு மற்றும் அரசியல் என்று அவர் கூறினார்.

பஹல்காமில் நடந்தது அனைவரையும் காயப்படுத்தியுள்ளது. இந்த சபையில் உள்ள அனைவருக்கும் பாதுகாப்பு உள்ளது. நாங்கள் எங்கு சென்றாலும், பாதுகாப்புப் படையினர் எங்களுடன் வருகிறார்கள். அன்று, 26 மகன்கள், தந்தைகள், கணவர்கள் இறந்தனர். அவர்களில் யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. நீங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம், ஆனால் இதை நீங்கள் மறுக்க முடியாது. நீங்கள் அவர்களைப் பாதுகாக்கவில்லை என சாடினார். ஒவ்வொருவரும் நம்மைப் போன்ற மனிதர்கள் என்பதை உணர அவர்களின் பெயர்களைப் படிக்க விரும்புகிறேன்.அவர்கள் அரசியல் கைப்பாவைகள் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் மகன்கள் மற்றும் தியாகிகள். நாம் அனைவரும் அவர்களின் குடும்பங்களுக்கு பொறுப்பு என ஏப்ரல் 25 அன்று கொடூரமாக கொல்லப்பட்ட 26 அப்பாவிகளின் பெயர்களை கூறி தனது உரையை பிரியங்கா காந்தி நிறைவு செய்தார்.