உலகம்

மீண்டும் முடங்கும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்காவின் முற்றுகையால் ஈரான் அதிரடி முடிவு!

அமெரிக்காவின் முற்றுகை தொடர்வதால், ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பகல்களுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக, ஈரான் ராணுவம் அறிவித்துள்ளது.

மீண்டும் முடங்கும் ஹோர்முஸ் நீரிணை: அமெரிக்காவின் முற்றுகையால் ஈரான் அதிரடி முடிவு!
Strait of Hormuz
சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதல், தற்காலிக அமைதிக்குப் பிறகு மீண்டும் வலுவடைந்துள்ளது. ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் வர்த்தகக் கப்பல்களுக்கு ஈரான் மீண்டும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

லெபனான் - இஸ்ரேல் இடையிலான 10 நாள் போர்நிறுத்தத்தை ஒட்டி, ஹோர்முஸ் நீரிணை வழியாக வர்த்தகக் கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்திருந்தது. ஆனால், ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க கடற்படையின் முற்றுகை தொடர்ந்து நீடிக்கும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஈரான் ராணுவம், அமெரிக்காவின் முற்றுகை தொடரும் வரை ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு மீண்டும் தடை விதிப்பதாக இன்று அறிவித்துள்ளது.

தோல்வியில் முடிந்த அமைதிப் பேச்சுவார்த்தை

பாகிஸ்தான் தலைமையில் நடைபெற்ற அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதற்கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் விளைவாக, ஈரானிய துறைமுகங்களில் இருந்து வரும் கப்பல்களை அமெரிக்க கடற்படையினர் தொடர்ந்து தடுத்து நிறுத்தி வருகின்றனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே, உலக நாடுகளின் எரிபொருள் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ஹோர்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் மீண்டும் தனது முழு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது.

உலகப் பொருளாதாரத்திற்குச் சவால்

ஈரானிய ராணுவத்தின் கூட்டுத் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்காவின் அச்சுறுத்தல் தொடர்ந்தால் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து வர்த்தகக் கப்பல்களும் முடக்கப்படும்" என எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.