உலகம்

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!

அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான F-35 போர் விமானம் தரையில் விழுந்து நொறுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பயிற்சியில் ஈடுபட்ட F-35 போர் விமானம்.. விபத்துக்குள்ளான அதிர்ச்சி சம்பவம்!
F-35 fighter jet involved in training crashes
அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான அதிநவீன F-35 போர் விமானம், கலிபோர்னியாவின் ஃப்ரெஸ்னோ நகரில் இருந்து சுமார் 64 கிலோமீட்டர் தென்மேற்கில் அமைந்துள்ள லீமோர் கடற்படை விமானத் தளத்திற்கு அருகில் விபத்துக்குள்ளானதாக அமெரிக்க கடற்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையில் விழுந்து நொறுங்குவதற்கு முன்பு, விமானி பாராசூட்டின் உதவியுடன் வெளியே குதித்து உயிர் தப்பினார். சம்பவத்தில் காயமடைந்த விமானி உடனடியாக மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விசாரணை மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் அறிக்கை

இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகக் கடற்படை அறிக்கை குறிப்பிட்டுள்ளது. F-35 போர் விமானங்களைத் தயாரிக்கும் அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்ததாரரான லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனம் இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், "லீமோர் கடற்படை விமானத் தளத்தில் நடந்த F-35 சம்பவம் குறித்து நாங்கள் அறிந்திருக்கிறோம்.

பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை, அமெரிக்க கடற்படைக்குத் தேவையான உதவிகளைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம். மேலும் தகவல்களுக்கு அமெரிக்க கடற்படை அல்லது லீமோர் கடற்படை விமானத் தளத்தின் மக்கள் தொடர்பு அலுவலகத்தை அணுகுவது சிறந்தது" என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த விபத்து தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

F-35 விமானத்தின் சிறப்பு அம்சங்கள்

F-35 போர் விமானங்கள், உலகின் ஒரே மேம்பட்ட, நீண்ட தூரம் செல்லும், ஸ்டெல்த் போர் விமானங்கள் ஆகும். இவை வான் ஆதிக்கம், தாக்குதல், மின்னணுப் போர் மற்றும் உளவுத் தகவல் சேகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.