உலகம்

அமேரிக்காவில் இந்தியர் கொடூர கொலை.. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை- அதிபர் டிரம்ப் உறுதி!

அமேரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர் கொடூரமாக கொல்லப்பட்டதுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அமேரிக்காவில் இந்தியர் கொடூர கொலை.. குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை- அதிபர் டிரம்ப் உறுதி!
Trump promises maximum punishment for Indian man's murder in US
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் ஒரு உணவகத்தில் மேலாளராகப் பணியாற்றி வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சந்திர நாகமல்லையா (50) கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார். இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொடூரக் கொலை

கியூபாவைச் சேர்ந்த சக உணவக ஊழியரான யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெஸ், சந்திர நாகமல்லையாவை அவரது மனைவி மற்றும் மகன் கண்முன்னே அரிவாளால் தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். பின்னர், துண்டிக்கப்பட்ட தலையைத் தரையில் உருட்டி அருகில் இருந்த குப்பைத்தொட்டியில் போட்டார். கர்நாடக மாநிலத்தைப் பூர்வீகமாகக் கொண்ட சந்திர நாகமல்லையா கொல்லப்பட்ட சம்பவம், அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக யோர்தானிஸ் கோபோஸ் மார்டினெஸ் கைது செய்யப்பட்டார்.

ஜோ பைடன் மீது டிரம்ப் கடும் தாக்கு

இந்தக் கொலை குறித்து ட்ரூத் சமூக வலைதளப் பக்கத்தில் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், “டல்லாஸில் சந்திர நாகமல்லையா கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பற்றி அறிந்தேன். கியூபாவைச் சேர்ந்த சட்டவிரோதக் குடியேறியால், மனைவி மற்றும் மகன் முன்னிலையில் அவர் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இது காட்டுமிராண்டித்தனமானது.

இந்தக் குற்றவாளி மீது பாலியல் வன்கொடுமை, வாகனக் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. திறனற்ற ஜோ பைடன் ஆட்சியில் இந்த நபர் விடுவிக்கப்பட்டுள்ளார். இது போன்ற சட்டவிரோதக் குடியேறி குற்றவாளி மீது எனது நிர்வாகம் மென்மையாக இருக்காது. போலீசார் காவலில் இருக்கும் இந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று அவர் உறுதியளித்தார்.