உலகம்

பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற குழந்தை.. தாய் கைது!

அமெரிக்காவில் தனது குழந்தையின் புத்தகப் பையில் துப்பாக்கியை வைத்து பள்ளிக்கு அனுப்பிய தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

பள்ளிக்கு துப்பாக்கியுடன் சென்ற குழந்தை.. தாய் கைது!
US Mom Arrested For Placing Loaded Gun In Child's School Backpack
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில், தனது குழந்தையின் புத்தகப் பையில் தோட்டா நிரப்பப்பட்ட துப்பாக்கியை வைத்து, அதை தந்தையிடம் ஒப்படைக்கச் சொல்லி அறிவுறுத்திய ஒரு தாய் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 13 அன்று, க்ளே கவுண்டி மிடில்பர்க் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் இந்த விபரீத சம்பவம் நடந்தது. பள்ளிக்கு வந்த குழந்தை, தன் பையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்து உடனடியாக ஆசிரியரிடம் தெரிவித்திருக்கிறது. இதையடுத்து, ஆசிரியரும், பள்ளி நிர்வாகமும் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பள்ளிக்கு யாரும் உள்ளே வரவோ, வெளியே செல்லவோ முடியாதபடி பாதுகாப்பை அதிகரித்து, துப்பாக்கியைக் கைப்பற்றினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், குழந்தையின் தாய், தந்தை இருவரும் பிரிந்து வாழ்வது தெரியவந்துள்ளது. தாயான சியரா பிரோனர் (39), துப்பாக்கியைக் குழந்தையின் பையில் வைத்து, அதைத் தந்தையிடம் கொடுக்கச் சொல்லியிருக்கிறார். இந்தத் திட்டம் பற்றி அறியாத தந்தை, குழந்தையைப் பள்ளியில் விட்டுச் சென்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுவர்களுக்கு துப்பாக்கி வழங்குதல் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து சியரா பிரோனர்ரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி மிஷெல் குக் கூறுகையில், "குழந்தையின் புத்தகப் பையில் துப்பாக்கியை வைத்து அனுப்பியது ஒரு மோசமான முடிவு. இது பெரிய துயரத்தில் முடிந்திருக்கலாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பைகளைச் சரிபார்த்து அனுப்புவதோடு, எதைக் கொண்டு வர வேண்டும், எதைக் கொண்டு வரக்கூடாது என்பது குறித்தும் பேச வேண்டும்" என்று எச்சரித்தார்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டில் சிகாகோவில் ஒரு மாணவன் பள்ளிக்கு துப்பாக்கி கொண்டு வந்தபோது, அது வெடித்து அவனுடைய நண்பன் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.