தமிழ்நாடு

அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை

சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

 அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை
அம்பேத்கர் பிறந்தநாள் விழா

அம்பேத்கரின் 135வது பிறந்தநாள் விழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்.14ம் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதேப்போல் தமிழக வெற்றிக்கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான அம்பேத்கரின் பிறந்தநாளை தமிழ்நாடு முழுவதும் கட்சியினர் சிறப்பாக கொண்டாட அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த நிலையில், மாவட்ட, ஒன்றிய, கிளை உள்ளிட்ட கட்சியின் அனைத்து பொறுப்பாளர்கள் அந்தந்த பகுதிகளில் அம்பேத்கர் பிறந்தநாளை கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதைத்தொடர்ந்து தவெகவினர் தமிழ்நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

விஜய் மரியாதை

இந்த நிலையில், அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் மாலை அணிவித்தும், மலர்தூவியும் மரியாதை செலுத்தினார். முன்னதாக விஜய் வருவதாக எந்த அறிவிப்பும் இல்லை என்றும் விஜய் வருவது தெரிந்தால் அதிகளவில் கூட்டம் கூடும் என்பதால் விஜய் மட்டும் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட சிலர் மட்டுமே அம்பேத்கர் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தினர்.

பனையூரை தாண்டாத விஜய் என்றெல்லாம் சமூக வலைத்தளங்களில் சிலர் விமர்சித்து வந்த நிலையில், பொது இடத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு விஜய் மரியாதை செலுத்தியுள்ளார்.
தவெக கட்சி ஆரம்பித்து, பனையூரில் உள்ள அலுவலகத்தில் மட்டுமே தலைவர் படங்கள் மற்றும் சிலைகளுக்கு மரியாதை செலுத்தி வந்த நிலையில் முதல் முறையாக விஜய் பொதுத்தளத்திற்கு வந்துள்ளார். தவெக தலைவர் விஜய்யின் வருகையால் பாலவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக ஜனநாயகன் படப்பிடிப்பிற்காக சென்னை மதுரவாயல் பகுதிக்கு சென்ற விஜய்யின் காரை சூழ்ந்துக்கொண்ட ரசிகர்கள், கட்சித் தொண்டர்கள் TVK...TVK...என கோஷம் எழுப்பினர். இதைத்தொடர்ந்து மக்களை பார்த்து விஜய் கையசைத்தார்.