தமிழ்நாடு

ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டம்.. ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்- ஆதவ் அர்ஜுனா

தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் தமிழக வெற்றிக் கழகம் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைப்பதாக தவெக தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பெருமிதம் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டம்.. ஆட்சியை விரைவில் கட்டமைப்போம்- ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா-விஜய்

நடிகர் விஜய்  கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ’தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கினார். முழு நேர அரசியல் பயணம் மேற்கொள்ள உள்ளதால் இனி திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று விஜய் அறிவித்தார். இதையடுத்து, விஜயின் கடைசி படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கி வருகிறார். ‘ஜனநாயகன்’ என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

2026-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலை இலக்காக கொண்டுள்ள விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் உட்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வருகிறார். சமீபத்தில் சென்னை பனையூர் கட்சி அலுவலகத்தில் நான்கு கட்ட மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விஜய் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டனர்.

இதையடுத்து, ஜனவரி 31-ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார்,  சமூக ஊடகப் பேச்சாளர் ராஜ் மோகன் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். இதில், ஆதவ் அர்ஜுனாவிற்கு தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 

மேலும், சி.டி.ஆர். நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப் பிரிவு துணைப் பொதுச்செயலாளர், ராஜ்மோகனுக்கு கழகக் கொள்கைப் பரப்புச் செயலாளர் போன்ற முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டனர். மேலும், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் புதிய பொறுப்பாளர்கள் குறித்த முக்கிய பட்டியலையும் வெளியிட்டார். 

தமிழக வெற்றிக் கழகம் தொடங்கி ஒராண்டு நிறைவுற்றதையடுத்து அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூர் அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, கொள்கைத் தலைவர்களான பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் 100 பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் பனையூர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், தவெக குறித்து அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசியலில் மாபெரும் ஜனநாயக சரித்திரத்தைப் படைத்திடும் போராட்டத்தில் இரண்டாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது தமிழக வெற்றிக் கழகம். சமத்துவம், சமூக நீதி, சம நீதி என்ற மானுட கோட்பாட்டையும், அதற்கு வழிகாட்டியாக, கொள்கை ஆசான்களாக ஐந்து வரலாற்றுத் தலைவர்களையும் கொண்டுள்ள நமது தமிழக வெற்றிக் கழகம், புதிய சகாப்தத்தை உருவாக்கவுள்ளது.

மக்கள் துணையுடன், தலைவரின் வழிகாட்டுதலுடன், முன்னணி நிர்வாகிகளின் ஒத்துழைப்புடன், தொண்டர்களின் உழைப்புடன் நாம் நம் மக்களுக்கான அந்த மகத்தான ஆட்சியை விரைவில் கட்டமைப்போம். கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தி, நூறாண்டுக் காலம் களமாடும் இயக்கமாக நமது வெற்றிக் கழகத்தை வீறுநடை போடச் செய்யும் வரலாற்றுப் பணி நம் முன் உள்ளது. அந்த இலக்கை அடைய அனைவரும் களத்தில் இறங்கி அயராது உழைப்போம் என்று இந்த இனிய நாளில் உறுதியேற்போம்” என்று குறிப்பிட்டுள்ளார்.