சென்னையில் தொடர் வழிப்பறி வழக்கில் வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமானவரித்துறை அதிகாரி பிரதீப், திருவல்லிக்கேணி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், SSI சன்னி லாய்டு ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில் SSI சன்னி லாய்டை நான்கு நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை செய்தனர்.
விசாரணையில், இவர்கள் கடந்த டிசம்பர் மாதம் 11-ம் தேதி ராயபுரம் பகுதியைச் சேர்ந்த தமிம் அன்சாரி என்பவரிடமிருந்து ஆயிரம் விளக்கு பகுதியில் வைத்து 40 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வருமான வரித்துறை கண்காணிப்பாளர் பிரபு, வருமானவரித்துறை ஆய்வாளர் தாமோதரன், வருமானவரித்துறை அதிகாரி பிரதீப், திருவல்லிக்கேணி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜா சிங், SSI சன்னி லாய்டு மற்றும் இரண்டு வணிகவரித்துறை அதிகாரிகள் மீது ஆயிரம் விளக்கு போலீசார் நேற்றிரவு வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வணிகவரித் துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நபர்களுடன் இணைந்து 40 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்தது தெரியவந்தது.இதனையடுத்து ஆயிரம் விளக்கு போலீசார் ஏற்கனவே கைது செய்யப்பட்ட ஐந்து அதிகாரிகள் மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது வழிப்பறி வழக்கை பதிவு செய்துள்ளனர்.
காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மேலும் ஒரு வழிப்பறி வழக்கை ஆயிரம் விளக்கு போலீசார் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, வணிகவரித்துறை அதிகாரிகளான சுரேஷ் மற்றும் சதீஷ் ஆகிய இருவரையும் ஆயிரம் விளக்கு போலீசார் தேடி வருகின்றனர். போலீஸ் கஸ்டடிக்கு பின்னர் சன்னி லாய்டு நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவருக்கு வரும் 14-ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னையில் தொடர் வழிப்பறி சம்பவங்களில் ஏற்கனவே மூன்று வருமானவரித்துறை அதிகாரிகள், இரண்டு காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது சென்னையில் மேலும் ஒரு வழிப்பறி சம்பவத்தில் இவர்களுடன் சேர்த்து தற்போது வணிகவரித்துறை அதிகாரிகள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழிப்பறி சம்பவங்களில் அடுத்தடுத்து சிக்கும் மத்திய, மாநில அரசுகளின் முக்கியத்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வரும் சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.