தமிழ்நாடு

தொடரும் ரயில் கவிழ்க்கும் சதித்திட்டங்கள்? அரக்கோணம் அருகே பரபரப்பு

அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் கற்கள் மற்றும் இரும்பு துண்டுகள் வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தொடரும் ரயில் கவிழ்க்கும் சதித்திட்டங்கள்? அரக்கோணம் அருகே பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் மேல்பாக்கம் வழியாக திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லும் ரயில் நேற்று காலை மேல்பாக்கம் ரயில் நிலையம் அருகே வந்தபோது முன்னேறி செல்ல சிக்னல் கிடைக்காததால் அங்கியே நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் ஆகியும் சிக்னல் கிடைக்காததால் சந்தேகத்தின் பேரில் ரயில்வே அதிகாரிகள் தண்டவாளங்களில் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தண்டவாளங்கள் மீது கற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் உடனடியாக இது குறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அப்பகுதி முழுவதும் ஆய்வு செய்ததில் சுமார் ஐந்து இடங்களில் தண்டவாளங்கள் மீது கற்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறு இரும்பு துண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக அரக்கோணம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருவலாங்காடு ரயில் நிலையம் அருகே போல்ட் மற்றும் நட்டு கழற்றப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தற்போது அரக்கோணம் அருகே தண்டவாளங்களில் கற்கள் வைத்து ரயில்களை கவிழ்க சதித்திட்டம் நடைபெறுகிறதா? என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவங்கள் போதிய கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டுள்ளதை சுட்டிக் காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.