தமிழ்நாடு

வடகிழக்குப் பருவமழை: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் தகவல்!

தமிழகத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல்கள் உருவாகச் சாதகமான சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

வடகிழக்குப் பருவமழை: வங்கக்கடலில் வலுவான புயல் உருவாக வாய்ப்பு- வானிலை ஆய்வாளர் தகவல்!
Possibility of a strong cyclone forming in the Bay of Bengal
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோன்தா' புயல் உருவான நிலையில், தற்போது மழை சற்று இடைவெளி விட்டிருக்கிறது. இந்தச் சூழலில், வருகிற நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்கக்கடலில் வலுவான புயல்கள் உருவாகச் சாதகமான சூழல் நிலவுவதாக தனியார் வானிலை ஆய்வாளர் டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பருவமழை நிலவரம்

பொதுவாக நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் புயல் போன்ற நிகழ்வுகளால் மழைக்கான வாய்ப்பு அதிக அளவில் இருக்கும். நடப்பாண்டில் பருவமழை தொடங்கிய சில நாட்களிலேயே 'மோன்தா' புயல் உருவாகி, ஆந்திரா நோக்கிச் சென்று தமிழக வட மாவட்டங்களுக்கு ஓரளவுக்கு மழையைக் கொடுத்தது.

தற்போது மழை சற்று இடைவெளி விட்டிருக்கும் நிலையில், அடுத்த மாதம் (நவம்பர்) 10-ஆம் தேதியிலிருந்து மீண்டும் பருவக்காற்று திரும்பி, 15-ஆம் தேதிக்குப் பிறகு மழை தீவிரம் எடுக்கும் என கூறப்படுகிறது.

புயல் உருவாகச் சாதகமான சூழல்

புயல் உள்ளிட்ட வானிலை நிகழ்வுகள் உருவாவதற்கும், கடல் சார்ந்த அலைவுகளை ஈர்ப்பதற்கும் கடலின் வெப்பநிலை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது வங்கக்கடலில் தற்போது சாதகமாக உள்ளது.

கிழக்கிந்தியப் பெருங்கடலில் சுமத்ரா கடற்கரை அருகே கடல் மேற்பரப்பு வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதும், அதேநேரத்தில் சோமாலியா கடற்கரை அருகே குளிர்ச்சி நீடிப்பதும் போன்ற சாதகமான சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்தச் சூழலை இந்தியப் பெருங்கடல் இருமுனை எதிர்மறை நிகழ்வு (Negative IOD) என்று சொல்லப்படுகிறது. இது அடுத்துவரும் 2 வாரங்களில் மேலும் தீவிரம் அடைய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்தார்.

2019 நிகழ்வு குறித்த ஒப்பீடு

ஏற்கனவே இதேபோன்ற நிகழ்வு 2019-ஆம் ஆண்டில் நிகழ்ந்தபோது, அரபிக்கடலில் அடுத்தடுத்த வானிலை நிகழ்வுகள் உருவாகின. அதில் ஒன்று 'சூப்பர்' புயலாகவும், ஒன்று அதி தீவிர புயலாகவும், ஒன்று மிகத் தீவிர புயலாகவும் வலுவடைந்தது குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில், தற்போதைய கடல் வெப்பநிலை அதிகரிப்பின் எதிரொலியாக வங்கக்கடலில் அடுத்தடுத்த தொடர் நிகழ்வுகளும், வலுவான புயலும் உருவாக வாய்ப்பு உள்ளது என்றும், இது தமிழகத்துக்கு நல்ல மழையைக் கொடுக்கும் நிகழ்வுகளாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.