தமிழ்நாடு

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ.."- கோவையில் பிரதமர் மோடி பேச்சு!

"பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது" என்று பிரதமர் மோடி கோவையில் நடந்த இயற்கை வேளாண் மாநாட்டில் பேசினார்.


PM Modi
கோவை கொடிசியா வளாகத்தில் தென்னிந்திய இயற்கை வேளாண் கூட்டமைப்பு சார்பில் இன்று தொடங்கிய 3 நாள் இயற்கை வேளாண் மாநாட்டைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

'சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால்..'

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, "தென்னிந்திய இயற்கை வேளாண் விவசாயிகள் மாநாட்டுக்கு தாமதமாக வந்ததற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். புட்டபர்த்திக்குச் சென்றதால் கோவை விவசாயிகள் மாநாட்டிற்கு வருகை தர ஒரு மணி நேரம் தாமதமானது. பி.ஆர். பாண்டியன் மிக அருமையாக உரையாற்றினார். அவரது உரை தமிழில் இருந்ததால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. ஆளுநர் ஆர். என். ரவியிடம் பி.ஆர். பாண்டியனின் உரையை ஆங்கிலம், இந்தியில் மொழிபெயர்த்து கொடுக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறேன். தமிழை கற்றுக்கொண்டிருக்கலாமே என்று நான் அடிக்கடி நினைத்தது உண்டு. சிறு வயதிலேயே தமிழ் கற்றுக்கொடுத்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன்.

இயற்கை விவசாயம் குறித்து பிரதமர் கருத்து

நான் இங்கே மேடையில் வந்தபோது விவசாயிகள் துண்டை சுழற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது பீகார் காற்று தமிழகத்தில் வீசுகிறதோ எனத் தோன்றியது. தமிழக விவசாயிகள் பேசியதை புரிந்து கொள்ளமுடியவில்லை என்றாலும் உணர முடிந்தது. எதிர்காலத்தில் வேளாண் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட உள்ளதை நாம் காணவிருக்கிறோம். இயற்கை விவசாயிகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை விவசாயம் என்பது விசேஷமான ஒன்று, எனது இதயத்திற்கு நெருக்கமானது. பொறியியல் படித்தவர்கள், இஸ்ரோவில் வேலையை விட்டுவிட்டு இயற்கை வேளாண் தொழிலுக்கு வந்துள்ளனர். கோவை மாநாட்டிற்கு வராமல் போயிருந்தால் இயற்கை விவசாயம் குறித்து நிறைய விஷயங்கள் எனக்குத் தெரியாமல் போயிருக்கும்.

கோவை பெருமை குறித்தும் பேச்சு

மருதமலையில் குடிகொண்டிருக்கும் முருகனை முழுமையாகத் தலை வணங்குகிறேன். கோவை என்பது கலாசாரம், கனிவு, கவின்படைப்புத் திறன் ஆகியவற்றைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்ட பூமி. தென் பாரதத்தின் தொழில்முனைவு ஆற்றலின் சக்தி பீடம். மேலும், கோவையை பெருமை சேர்க்கும் விதமாக, கோவையை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் குடியரசு துணைத் தலைவராக, நம் அனைவருக்கும் வழிகாடியாக இருந்து கொண்டிருக்கிறார். கோவையின் எம்பியாக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று குடியரசு துணை தலைவராக நம்மை வழிநடத்துகிறார். கோவை ஜவுளித்துறை இந்தியப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகிறது" என்று தெரிவித்தார்.