தமிழ்நாடு

டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?

அதிகாலையில் கணவன் டீ குடிக்கச் சென்ற இடைவெளியில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மனைவியை மர்மநபர் கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. திண்டுக்கல் அருகே நிகழ்ந்துள்ள பகீர் கொலை குறித்து பார்ப்போம்...

டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?
டீ குடிக்கச் சென்ற கணவன் வீட்டில் சடலமான மனைவி.. கேப்பில் கொலை செய்த மர்ம நபர்?

திண்டுக்கல் அருகே உள்ள குடைப்பாறைப்பட்டி பிஸ்மி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயிலானி. டீ மாஸ்டராக வேலை செய்துவரும் இவருக்கு முகமதா பீவி என்னும் மனைவியும், மகளும் உள்ளனர். மகள் திருமணமாகி கணவர் வீட்டுக்கு சென்ற நிலையில், ஜெயிலானியும், முகமதா பீவியும் மட்டும்  வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

வியாழக்கிழமை காலை வழக்கம்போல எழுந்த ஜெயிலானி, அருகே உள்ள கடைக்கு டீ சாப்பிடச் சென்றுள்ளார். அப்போது முகமதா பீவி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளார். ஜெயிலானி கடைக்கு சென்று டீ குடித்துவிட்டு வந்து பார்த்தபோது, அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அங்கு ரத்த வெள்ளத்தில் முகமதா பீவி சடலமாகக் கிடந்தது தான். ஜெயிலானி டீ குடிக்கச் சென்ற அந்த இடைவெளியில் வீட்டுக்குள் புகுந்த மர்மநபர், முகமதா பீவியின் தலையில் கல்லைத் தூக்கிப் போட்டு படுகொலை செய்துவிட்டு தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த தகவலின் பேரில்,  திண்டுக்கல் தாலுகா காவல்நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முகமதா பீவியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக,  திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார், முகமதா பீவியை கொலை செய்தது யார்? கொலையின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். கணவன் வெளியில் சென்றிருந்த சிறிது நேரத்தில், அவரது மனைவி படுகொலையான சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பையும், குடியிருப்புவாசிகள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.