தமிழ்நாடு

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்

மூன்று மணி நேரம் முன்னதாக சென்றிருந்தால் தாங்களும் பலியாகியிருப்போம் என காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. 3 மணிநேரம் தாமதமானதால் உயிர் பிழைத்த தமிழர்கள்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், திரையுலகினர், விளையாட்டு வீரர்கள் தங்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்று தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

விசா ரத்து

பயங்கரவாத தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் ஒருவாரத்தில் வெளியேறவும், பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும், பாகிஸ்தானில் இந்தியர்கள் யாரேனும் இருந்தால் நாடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திரும்பிய மக்கள்

தமிழகத்திலிருந்து பஹல்காம் பகுதிக்கு சுற்றுலா சென்ற மதுரையைச் சேர்ந்த 14 பேர் மற்றும் சென்னையை சேர்ந்த 5 பேர் உள்ளிட்ட 19 பேர் தமிழக அரசின் உதவியுடன் பத்திரமாக விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். அப்போது சென்னை திரும்பியவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டி தழுவி அவர்களை வரவேற்றனர். பின்னர் அவர்களை தமிழக அரசு அதிகாரிகள் பத்திரமாக அவரவர் சொந்த வாகனங்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

காஷ்மீரில் இருந்து திரும்பியவர்கள் பேசியதாவது, பயங்கரவாத தாக்குதல் நடத்த இடத்திற்கு தாங்களும் போக இருந்த நிலையில் மூன்று மணி நேரம் தாமதமானதால் உயிர் பிழைத்ததாகவும் தகவல் கிடைத்தவுடன் தாங்கள் இருந்த விடுதிக்கு சென்று தப்பித்ததாகவும் பயம் கலந்த வேதனையுடன் தெரிவித்தனர்.