இந்தியா

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்

ஜம்மு-காஷ்மீர் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல்துறை அறிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்
ஜம்மு-காஷ்மீர் தாக்குதல்.. தீவிரவாதிகள் குறித்த தகவலுக்கு ரூ.20 லட்சம் சன்மானம்
ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காம் பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 28 பேர் உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுதுவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய தாக்குதலாக இச்சம்பவம் கருதப்படுகிறது.

அரசுமுறைப் பயணமாக சவுதி அரேபியா சென்ற மோடி இச்சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா திரும்பினார். தொடர்ந்து டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்ட மூத்த அதிகாரிகளுடன் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனை மேற்கொண்டார். இதையடுத்து, ஸ்ரீநகருக்கு சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்குதல் நடந்த இடத்தை பார்வையிட்டதுடன் உயிரிழந்தவர்களின் உடலுக்கு மரியாதை செலுத்தினார்.

ரூ.20 லட்சம் சன்மானம் அறிவிப்பு

இந்நிலையில், தாக்குதல் நடந்த பஹல்காம் அமைந்துள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் காவல்துறையினர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதன்படி, தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகள் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்றும் தகவல் தருபவர்கள் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, தாக்குதலில் இருந்து உயிர் பிழைத்தோர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வரையப்பட்ட மூன்று தீவிரவதிகளின் மாதிரி ஓவியங்களை போலீசார் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.