தமிழ்நாடு

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!

பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்ப்பதற்கான யுஜிசி அறிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தி, நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவனை முற்றுகையிட முயன்ற எஸ்.எஃப்.ஐ (SFI) அமைப்பைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது!
பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடம்: எதிர்த்துப் போராடிய மாணவர்கள் கைது
கையில் பதாகைகளை ஏந்தியபடி, மத்திய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், யுஜிசி அறிக்கையைத் தீயிட்டுக் கொளுத்த முற்பட்டபோது, அவர்களைத் தடுத்த போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

மாணவர்கள் வலுக்கட்டாயமாகக் கைது

அதனைத் தொடர்ந்து, சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்ற போலீசார் அவர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை மாநகரப் பேருந்தில் ஏற்றியபோதும், சில மாணவர்கள் கதவுகளைத் தட்டி வெளியே வர முயன்றதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கைது செய்த போலீசார், அவர்களை ஒரு திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

எஸ்.எஃப்.ஐ.யின் குற்றச்சாட்டுகள்

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.எஃப்.ஐ. மாநிலச் செயலாளர் சம்சீர் அஹ்மத் கூறுகையில், "2000 ஆண்டுகளுக்கு முன் இருந்த நிலைக்கு இந்தியக் கல்விமுறையைப் பின்னோக்கி கொண்டு செல்லும் திட்டத்தை மத்திய அரசு மேற்கொள்கிறது. கல்வியைத் தொடர்ந்து மத்திய அரசுக் காவியம் ஆக்கி வருகிறது" என்று குற்றம் சாட்டினார்.

மேலும், "மனுதர்மம், அர்த்த சாஸ்திரம் போன்ற பாடத்திட்டங்களைப் புகுத்த முயல்வதாகவும், மனுதர்மத்தை மாணவர்கள் படிக்கச் சொல்வது நியாயமில்லை எனவும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் மதச்சார்பின்மைக்கு எதிராகச் சாதிப் பாகுபாட்டை முன்னிறுத்தி இந்த அறிக்கை உள்ளதாகவும், அதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம் பாஜகவை முழுமையாக நிராகரித்தது நிரூபணமாகிவிட்ட நிலையில், யுஜிசி தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியிருப்பதாகவும் சம்சீர் அஹ்மத் தெரிவித்தார்.