காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தன் வயது மூப்பு மற்றும் சிறுநீரக பிரச்னை காரணமாக சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த குமரி அனந்தன், சாத்தான்குளம், ராதாபுரம், திருவெற்றியூர் தொகுதிகளில் எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1977 ம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்லிலில் நாகர்கோவில்தொகுதியில் போட்டியிட்டு வென்றவர்.
கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் 1933-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி பிறந்தவர் குமரி அனந்தன். இவரது இயற்பெயர் அனந்த கிருஷ்ணன். தமிழ் மீது ஆர்வம் கொண்ட குமரி அனந்தன், தமிழில் முதுகலை மற்றும் முனைவர் பட்டங்கள் பெற்றவர். சிறிது காலம் தமிழாசிரியராக மதுரையில் பணியாற்றினார்.
இலக்கிய செல்வர் எனஅனைவராலும் அழைக்கப்பட்டு வந்த அவருக்கு ஒரு மகன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட 4 மகள்கள் உள்ளனர். மறைந்த காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் இவரது சகோதரர் ஆவார். விமானங்களில் தமிழில் அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியவர் குமரி அனந்தன். நாடாளுமன்றத்தில் தமிழில் கேள்வி எழுப்பும் உரிமையை பெற்று வந்த பெருமை அவரையே சாரும்.
மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என பெயர் வர காரணமாக இருந்தவர். தந்தி விண்ணப்பங்கள், மணியார்டர் போன்றவற்றில் தமிழ் இடம் பெற வேண்டும் என போராடி பெற்றுத்தந்தவர். தமிழக காங்கிரஸ் சார்பில் பல முறை யாத்திரை மேற்கொண்டவர் என பல சிறப்புகளுக்கு சொந்தக்காரர். குமரி அனந்தனுக்கு, தமிழக அரசு சார்பில் 2024ம் ஆண்டு தகைசால் தமிழர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மறைந்த குமரி அனந்தன் உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
தமிழ்நாடு
காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் காலமானார்!
காங்கிரஸ் முன்னாள் மாநில தலைவரும், தமிழிசை சவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தன் (வயது 93) உடல்நலக்குறைவால் காலமானார்.