தமிழ்நாடு

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!

திருச்சியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி வந்தடைந்தார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்றுவரும் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் மாமன்னர் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை வெளியிட்டார் பிரதமர் மோடி.

கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!
கங்கை கொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி.. பெருவுடையார் கோயிலில் சாமி தரிசனம்!
கங்கை கொண்ட சோழபுரம், ராஜேந்திர சோழனின் ஆட்சிக் காலத்தில் சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகராக விளங்கியது. பிரம்மாண்டமான கோயில், சோழர்களின் கலைத்திறனுக்கு ஒரு சான்றாக இன்றும் கம்பீரமாக நிற்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது.

பிரதமர் மோடியின் வருகை, இந்தக் கோயிலின் புகழை உலகறியச் செய்வதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தின் சுற்றுலாத் துறைக்கும் ஒரு ஊக்கத்தை அளிக்கும். கோயிலின் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டுக்கு இது வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடித்திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவில், பிரதமர் மோடி பங்கேற்றார். மாமன்னன் ராஜேந்திர சோழனுக்கு புகழாரம் சூட்டும் வகையில், நடைபெறும் இந்த விழாவில் பங்கேற்க வருகைத்தந்த மோடிக்கு பொதுமக்கள் உள்ளிட்ட பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கங்கைகொண்ட சோழபுரத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து வந்துள்ள பிரதமர் மோடிக்கு பிரகதீஸ்வரர் கோவிலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. கங்கை கொண்ட சோழபுரம் திருக்கோவிலின் சுற்று மாளிகையில் சிற்ப வேலைப்பாடுகளைப் பார்வையிட்டார்.

பின்னர் பெருவுடையார், பெரியநாயகி அம்மன், சண்டிகேசுவரர், விநாயகர், முருகன் ஆகிய சந்நிதிகளுக்குச் சென்று சுவாமி தரிசனம் மேற்கொண்டார். பெருவுடையார் கோயில் வளாகத்தில் சிறப்பு வழிபாடுகளுக்குப் பினனர், பிரதமர் நரேந்திர மோடி சிறிது நேரம் தியானம் மேற்கொண்டார்.

இன்றைய நிகழ்வில் இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிகள் நிறைவடைந்த பின்னர், பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, திருச்சி விமான நிலையத்திற்கு சென்றடைய உள்ளார். அதனைத்தொடர்ந்து, திருச்சியிலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார்.