இந்தியா

பெங்களூருவில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!

பெங்களூருவில் நகைக்கடை ஒன்றில் மர்ம நபர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெங்களூருவில் பரபரப்பு.. துப்பாக்கி முனையில் நகைக்கடையில் கொள்ளை!
Jewellery Store Robbed at Gunpoint
கர்நாடக மாநிலம், பெங்களூருவின் மகடி சாலையில் உள்ள ஒரு பிரபலமான நகைக்கடையில், ஊழியர்கள் கடையை மூடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, துப்பாக்கி முனையில் 184 கிராம் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகடி சாலையில் கன்னையா லால் (46) என்பவர் நடத்தி வரும் நகைக்கடையில், நேற்று முன்தினம் (ஜூலை 25) இரவு 9 மணியளவில் இந்தக் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. முகமூடி அணிந்த மூன்று மர்ம நபர்கள் திடீரென கடைக்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அவர்கள் நகைக்கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்களை துப்பாக்கியைக் காட்டி மிரட்டி, கடையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த 184 கிராம் தங்க நகைகளைக் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்கள் தப்பியோட முயன்றபோது எதிர்ப்பு தெரிவித்த உரிமையாளரை அவர்கள் மீண்டும் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியுள்ளனர்.

இந்தக் கொள்ளைச் சம்பவம் கடையில் இருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாகப் பதிவாகியுள்ளது. கொள்ளையர்கள் முகமூடியுடன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து, கன்னையா லால் அளித்த புகாரின்பேரில், மதநாயக்கனஹள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில், கொள்ளை சம்பவத்திற்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி போலியானதாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர். கொள்ளையர்களைப் பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.